கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கொண்டு சிறப்புரையாற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன்,
“கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வரும் பிப்ரவரி 4 – ம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக சாதனை நிகழ்ச்சியாக 12,000 பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற உள்ளது. வள்ளி கும்மி ஆட்டத்தை ஒருசில அமைப்புகள் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சாதி ரீதியாக முத்திரை குத்தி எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பத்தாயிரம் பெண்கள் பங்கேற்று உலக சாதனை படைத்த முந்தைய சாதனையை, முறியடிக்கும் வகையில், புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொங்கு வேளாளர் சமூகத்தில் உள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து வள்ளி கும்மி ஆட்டம் நடத்தி, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள். அதனை எதிர்ப்பவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்த்து வருகிறார்கள். வள்ளி கும்மி ஆட்டத்தை அவர்கள் எதிர்க்க, நாங்கள் அதனை உலகம் போற்றும் வகையில் நடத்திக் காட்டுவோம். தி.மு.க கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடங்கவில்லை என்று ஒரு சில ஊடகங்களில் வரும் செய்தியில் உண்மை கிடையாது.
அதே போல, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது, அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம். ஆகவே, அது நம்முடைய நாட்டில் ஒத்துவராது. அதோடு, அது இப்போதைக்கு நடைமுறைக்கும் சாத்தியம் அல்ல. காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றது. கடந்த 2014 – ம் ஆண்டே பாரத பிரதமர் தேர்தலின் வாக்குறுதியில், ‘கங்கையும், காவிரியும் இணைக்கப்படும்’ என்று சொன்னார். ஆனால், இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதேபோல், 2019 – ல் கோதாவரியை கொண்டு வந்து இணைப்போம் என்று சொன்னார். ஆனால், அதுவும் இன்றுவரை இணைக்கப்படவில்லை. ஆகவே, 2024 – ம் ஆண்டான இந்த வருட தேர்தலில் எதை இணைப்போம் என்று சொல்லப்போகின்றார்களோ என்பது தெரியவில்லை.

தொடர்ந்து, ‘தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்’ என்று அடிக்கடி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். ஊழல் செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரலாம். அதில் உண்மை இருந்தால் தண்டனையும் பெறலாம். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், உள்நோக்கத்துடனும், மிரட்டும் தொனியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருவது தான் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வப்போது உள்நோக்கத்துடன் மிரட்டுகின்ற தொனியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகின்றார்.” என்றவர், `கள் இறக்குவது ஒன்று தான் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும். ஆகவே, கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com