ஆண்டு தோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற திராவிட மாடல், தமிழ்நாடு உள்ளிட்ட சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்தார் ஆளுநர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை அவர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையையாக வெடித்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பியது, திராவிடம் குறித்து சர்ச்சையாக பேசியது என தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் கன்னித்தீவு கதையாக தொடர்கிறது. இந்தநிலையில் 2024-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர், “புத்தாண்டு பிறப்பதற்கு குறுகிய நாள்களே இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தை கூட்டுவதற்கான வேலைகள் தலைமை செயலகத்தில் பரபரத்துக் கிடக்கிறது. சமீபத்தில், ‘பொங்கலுக்கு முன்பு கூட்டத்தை கூட்டலாமா? அல்லது பிறகு கூட்டலாமா? என்பது குறித்தும், எப்போதும் ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய அதிகாரிகள், “வரும் ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்த விஷயங்கள் சட்டசபை கூட்டத்தொடரில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு மாநாட்டை நடத்தலாம்” என ஆலோசனை கூறியிருக்கிறார்கள். இருப்பினும் இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றனர்.
கோட்டை விவரப்புள்ளிகள் சிலர் பேசுகையில், “தமிழக அரசு தயாரித்து வழங்கிய அறிக்கையை ஆளுநர் படிக்காததால், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் சர்ச்சையானது. ஒவ்வொரு முறையும் கூட்டத்தொடருக்கு முன்பே ஆளுநருக்கான உரை தயாரிக்கப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கம் அளிப்பார்கள். அந்தவகையில் இந்த முறை செல்லும் அதிகாரிகளிடம், ‘எத்தனை இடங்களில் தமிழ்நாடு, திராவிடம் போன்ற வார்த்தைகள் இருக்கிறது’ என்பது போன்ற விஷயங்களை ஆளுநரிடம் எடுத்துரைக்க திட்டமிட்டு இருக்கிறது, தமிழக அரசு.
அப்போது அந்த வார்த்தைகளை படிப்பதற்கு ஆளுநர் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கூட்டத்திற்கு அழைக்கப்படுவார். இல்லையென்றால் தெலங்கானவை போல ஆளுநர் உரை இல்லாமல் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படும். பொங்கலுக்கு பிறகு 3 முதல் 4 நாட்களுக்கு இந்த கூட்டத்தொடர் நடைபெறும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com