பைஜூஸ் நிறுவனத்தின் சிஇஓவாக அர்ஜூன் மோகன் பதவியேற்ற உடனே 5,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் புதிய சிஇஓ-வாக அர்ஜுன் மோகன் பதவியேற்றுள்ளார். நிறுவனத்தை எப்படியாவது லாபகரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முக்கியமான டார்கெட்டை பைஜூஸ் ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகம் கொடுத்துள்ளது.
அர்ஜூன் மோகன் ஏற்கனவே இத்துறையில் பணியாற்றியிருந்த நிலையில், சிஇஓ பதவிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியுள்ளார். அர்ஜூன் மோகன் பதவிக்கு வந்த சில நாட்களில் பைஜூஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் பல வர்த்தகத்தை ஒன்றிணைக்க உள்ளதாக உயர்மட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். இந்த இணைப்பின் பணி அடுத்த சில நாட்களில் துவங்க உள்ள வேளையில் பைஜூஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கை நடக்க உள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பைஜூஸ் நிறுவனத்தில் 4500 முதல் 5500 ஊழியர்கள் வரையில் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலில் நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கம் பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் கீழ் இருக்கும் வர்த்தகங்களில் மட்டும் தான் இருக்கும். இதன் கிளை நிறுவனங்களில் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த பணிநீக்க சுற்றில் உயர் அதிகாரிகள் அதிகப்படியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிநீக்கம் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் வர்த்தகம், சேவைகள் தற்காலிகமாக குறுகிய காலத்திற்கு பாதிக்கப்பட்டாலும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிறுவனத்திற்கு இத்தகைய முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளதாக தலைமை நிர்வாகம் நம்புகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com