மும்பையின் தென்பகுதியில் வசிப்பவர் சுசிலா (27). இவரின் கணவர், குடும்பப் பிரச்னையால் பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சிறுவன் ஒரு சர்வதேசப் பள்ளியில் ப்ரீகேஜி படிக்கிறார்.
கடந்த ஜூலை 13-ம் தேதி, சுசிலா தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பள்ளி வாசலில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது அவரின் கணவர் ஸ்கூட்டரில் வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுசிலாவிடமிருந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுவிட்டார். உடனே போலீஸ் நிலையத்தில் சுசிலா புகார் செய்தார்.
ஆனால், குழந்தையை தந்தை அழைத்துச் சென்றிருப்பதால் கடத்தல் வழக்காகப் பதிவு செய்ய முடியாது என்று போலீஸார் தெரிவித்து விட்டனர். சுசிலா, தன் கணவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கணவரின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இதனிடையே, கணவர் இமெயில் ஒன்று அனுப்பி இருந்தார். அதில் குழந்தையை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் செல்வதாகவும், விரைவில் வந்துவிடுவதாகவும், சொல்லாமல் அழைத்துச் சென்றதற்கு மன்னித்து விடும்படியும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும் சுசிலா இது தொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com