தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான வல்லரசுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றதுடன், ‘டெல்லி பிரகடனத்துக்கு’ எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் அனைத்துத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இந்த உச்சி மாநாட்டுக்குப் பிறகு, உலக அரங்கில் இந்தியா குறித்த பார்வை வெகுவாக மாறியிருக்கிறது. ‘‘எங்களால் இதுவும் முடியும்; இன்னமும் முடியும்’’ என்பதை உலக அரங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக எடுத்துச் சொன்னது, அவரது தலைமையின் வெற்றி மகுடத்துக்குக் கிடைத்த இன்னொரு நல்முத்து எனத் தயங்காமல் சொல்லலாம்!
ஆனால், இந்தப் பெருமையை இத்துடன் முடித்துக்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் எடுத்தாக வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்கத் தொடங்குவது நல்லது. சந்திரயான், ஜி20 உச்சி மாநாடு என அடுத்தடுத்து இரு சாதனைகளைச் செய்து முடித்திருக்கும் அதே சமயத்தில், நம் நாட்டின் பொருளாதார நிலை குறித்த தரச் சான்றை (Sovereign credit rating) மிகப் பெரிய அளவில் உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை அவசியம் புரிந்துகொண்டாக வேண்டும்.
1990-களில் நமது பொருளாதாரம் குறித்து தரச் சான்றளிக்கும் நிறுவனங்கள் (Credit rating agencies) நம்மை ‘நிச்சயமற்ற நிலை’ (Speculative grade) என்கிற அளவில்தான் வைத்திருந்தன. ஆனால், இன்று ‘முதலீட்டுக்கேற்ற நிலை’ (Investment grade) என்ற அளவுக்கு நமது பொருளாதாரத்துக்கான தரச் சான்று முன்னேற்றம் கண்டிருப்பது மிகப் பெரிய வளர்ச்சிதான். தவிர, உலகப் பொருளா தாரம் மோசமாக இருந்த காலகட்டத்திலும்கூட நம் பொருளாதாரத்துக்கான தரச் சான்று ‘BBB/Baa3’ என்கிற மோசமான நிலைக்கு இறக்கம் செய்யப்பட்டதே இல்லை என்பதெல்லாம் நமக்குப் பெருமை தரும் தகவல்கள்தான்.
அதே சமயம், நமது பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தற்போது கிடைத் திருக்கும் தரச் சான்றுகள் அனைத்துமே ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவுக்குக்கூட இல்லாமல், அதைவிடக் கொஞ்சம் கீழான நிலையிலேயே உள்ளன. நம் பொருளாதார நிலை ‘மிக மிக மோசம்’ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், இப்போதுள்ள தரச் சான்று நிச்சயம் போதாது!
தற்போது நமக்குக் கிடைத்துள்ள தரச் சான்றைக் கணிசமான அளவில் உயர்த்துவதன் மூலமே நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் வேகமாகக் கொண்டு செல்ல முடியும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசிப்பதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது.
‘மாநாடு வெற்றி’ என்கிற மதமதப்பில் நாம் இதை மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்தால், நம் நாட்டின் தரச் சான்றும் உயராது; நம் நாடு வல்லரசாக வேண்டும் என்கிற கனவும் பலிக்காது!
– ஆசிரியர்
நன்றி
Publisher: www.vikatan.com