டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வரும் 9, 10-ம் தேதிகளில், ‘ஜி – 20’ உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸி, சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் டெல்லி வருகின்றனர். 10,000க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீனப் பிரதமர் லி கியாங் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாததற்காக காரணம் பற்றி பீஜிங் தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மார்ச் 2023-ல் சீனப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் லி கியாங் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். ஷாங்காய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான லி கியாங் அதிபர் ஜி ஜின்பிங்கின் தீவிர விசுவாசி என்பதும், சீன அரசியலின் நம்பர் 2 என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரவ் பங்கேற்பார் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஜி 20 மாநாடு நடக்கும் இந்தியாவுக்கான பயணத்தை மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது பற்றி கேள்விப்பட்டப்போது நான் ஏமாற்றம் அடைந்தேன். மாநாட்டில் அவர் பங்கேற்காவிட்டாலும், விரைவில் சந்தித்து பேசுவேன்” என்று கூறியிருக்கிறார்.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி ஜோ பைடன் இந்தியா வரும்படி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நான்கு நாள்கள் இந்தியாவில் தங்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதனிடையே ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் ஜோ பைடனின் வருகை குறித்து வெள்ளை மாளிகை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஜோ பைடன், ஜி20 மாநாடு தொடங்குவதற்கு இரு நாள்களுக்கு முன்னரே வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றங்கள் வருமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே மாநாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இப்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது. இதன் உந்து சக்தியாக இந்தியா செயல்படுகிறது. உலக நலனுக்கான ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ வழிகாட்டும் கொள்கை வகுக்கப்பட்டது. வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். நாட்டில் ஊழல், சாதிவெறி, வகுப்புவாதத்திற்கு இனிமேல் இடமிருக்காது. ஜி-20 உச்சி மாநாட்டில் எதிர்கால திட்டத்திற்கான பாதை வகுக்கப்படும். இது வெறும் யோசனைகளாக இருக்காது.
ஒரு பில்லியன் மக்கள் பசியால் வாடுவதாக கூறப்பட்ட இந்தியா, தற்போது ஒரு பில்லியன் ஆசைகளுடன், இரண்டு பில்லியன் திறமையான இளைஞர்களின் கைகளுடன் உள்ளது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான வளர்ச்சியின் அடித்தளத்தை இந்தியர்கள் வகுப்பார்கள். அதில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கும். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கும். பாகிஸ்தான், சீனாவின் ஆட்சேபனைகளை மீறி காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்தில் ஜி-20 மாநாடுகள் நடத்தப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மாநாடுகளை நடத்தினோம். ஜி-20 உச்சி மாநாட்டின் நோக்கமானது ‘வசுதைவ குடும்பம்’ என்பதாகும். இது வெறும் கோஷம் மட்டுமல்ல, நம்முடைய நாட்டின் கலாசார நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் அமையும்” என்று தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஜி20 மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேசி, “ஜி20 மாநாட்டுக்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கு, மத்திய டெல்லி, ஏரோசிட்டி, குருகிராம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட நாட்டு குழுக்களுடன், புதுடெல்லி போலீஸார் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
டெல்லியில் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக சாந்தினி சவுக் பகுதியில் விற்கப்படும் சாலையோர உணவுகள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. இந்த மாநாட்டில், வெளிநாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் சாலையோர உணவு வகைகளை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு, நம் நாட்டின் பாரம்பரிய உணவான தினையில் செய்யப்பட்ட பல புதிய உணவுகள், வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிமாறப்பட உள்ளன. இதற்காக, நம் நாட்டின் புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் இரவு – பகலாக பல்வேறு புதிய உணவு வகைகளை உருவாக்கி, உலக தலைவர்களுக்கான உணவு பட்டியலை தயார் செய்து வருகின்றனர். அதேபோல, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் ஓவிய மரபுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com