சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூரில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் அரசு பள்ளி மாணவிகள் பேருந்தை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
வண்டலூர்: சென்னை தாம்பரம் அடுத்துள்ள வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் மாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை, மாம்பாக்கத்தில் இருந்து தடம் எண் 55N பேருந்தில் ஏறி அந்த இரண்டு மாணவிகளும் கொளப்பாக்கம் அண்ணா நகருக்கு வந்து கொண்டிருந்தனர்.
நிற்காமல் சென்ற அரசு பேருந்து
அப்போது, பேருந்து கொளப்பாக்கம் அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்று கொளப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு மாணவிகளும் உடனடியாக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களிடம் லிப்ட் கேட்டு சென்று, அவர்கள் வந்த அரசு பேருந்தை வழி மடக்கி பேருந்து முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அப்போது உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய டிரைவர் மற்றும் நடத்துநர் இருவரும், அந்த மாணவிகளிடம் சாலை மறியலுக்கான காரணத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவிகள் தங்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிற்காமல் போனதாகவும், இது முதல்முறை அல்ல என்றும் எப்போதும் இதுபோன்று தான் நடக்கிறது எனவும் கூறியதாக தெரிகிறது. ஆகவே இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுகிறோம் என டிரைவர் மற்றும் நடத்துநரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் சமாதான பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி மாணவிகளை ஏற்றிச் செல்கிறோம் என உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து 2 மாணவிகளும் சாலை மறியலை கைவிட்டனர். பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாததால் இரண்டு மாணவிகள் துணிச்சலாக பஸ்சின் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கொளப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு விசாரித்தோம் : இதுகுறித்து விளக்கம் கேட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
நன்றி
Publisher: tamil.abplive.com