மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் என்பதில் பெருமை கொள்கிறேன். குடும்பத்தில் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் என்பதால் சிறு வயதிலிருந்தே நானும் அதிலே பணியாற்றி வருகிறேன். 50 ஆண்டு காலம் முழு நேரமாக அமைப்பிற்காக பணியாற்றியுள்ளேன். இன்னும் பணியாற்றுவேன்.

நான் ஆளுநராக ஆவதற்கு முன்பு, அரசியல் கட்சியில் இருந்தபோது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காந்திஜியை சுட்டுக்கொன்றவர்கள் நீங்கள்தான் என்று என்னிடம் காங்கிரஸை சேர்ந்தவர் குற்றம்சாட்டியபோது, காந்தியை அவமானப்படுத்தாதீர்கள் என்றேன். அவருக்கு புரியவில்லை, பின்பு அவரிடம் விளக்கமாக நான் சார்ந்திருந்த இயக்கம் வளர்ந்து மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கும் வந்துவிட்டது. இதனால், காந்தியை கொன்றது சரிதான் என பாரத நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்று அரசியல் நோக்கர்களும், வெளிநாட்டவர்களும் நினைத்துவிட்டால் யாருக்கு அவமானம், எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக காந்திஜியை அவமானப்படுத்த வேண்டாம் என கூறினேன். அதோடு இனி அப்படி கூறமாட்டேன் என்றார்.
காந்திஜியை கொன்றவர்கள் அல்ல, காந்திஜியின் சித்தாந்தத்தை உண்மையாகவே ஏற்று நடப்பபவர்கள் என மக்கள் கருதுகிற காரணத்தால்தான் அந்த இயக்கம் மக்களின் பேராதரவை பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

காந்தியின் சித்தாந்தத்தை படித்து பட்டம் பெற்றவர் ஸ்ரீநிவாசன். நான் எந்த லட்சியத்திற்காக வாழ்கிறேனோ அதனை மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். மகாத்மா காந்தியின் கருத்துகள் நிரந்தரமானது. அவரை பல பேர் தவறாக புரிந்துகொண்டது குறித்து இவர் சரியான கருத்துகளை கூறியுள்ளார்.
இந்த நூலில் உள்ள மதசார்பின்மை, முதலாளித்துவம், சோஷியலிசம் போன்ற கருத்துகள் தேசத்தில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டதே புதிய தோற்றத்தில் வந்துள்ளது என்று காந்திஜி சொன்ன கருத்துகளை மேற்கோள் காட்டி இந்த இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்று பேசினார்.
இந்த விழாவில் வேலம்மாள் நிறுவனத்தலைவர் முத்துராமலிங்கம், வடமலையான் மருத்துவமனை புகழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதே போன்று, விருதுநகரில் பாண்டிய பூமி அமைப்பு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சொற்பொழிவு விழா விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜன.2) நடைபெற்றது. இந்த விழாவில் பேராசிரியர் இராம. சீனிவாசன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேராசிரியர் இராம. சீனிவாசன் பேசுகையில், “வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலை வைக்க வேண்டுமென கேட்டு கோரிக்கை மனுக்கள் வரப்பெறுகின்றன. ஆனால் உண்மையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு லண்டனில் சிலை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு சுதந்திர வேட்கையை விதைத்தவரின் வீரத்தை அந்த ஆங்கிலேயருக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும் விதமாக லண்டனில் சிலை வைக்க வேண்டும். அது மட்டுமல்ல தென் தமிழகத்திலிருந்து சுதந்திர போராட்டத்தை நாடெங்கும் பரவச்செய்த வெள்ளைய தேவன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், அழகுமுத்துக்கோன் உள்ளிட்டோருக்கும் சிலை வைக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து கவர்னர் இல.கணேசன் பேசுகையில், “வீரபாண்டிய கட்டபொம்மனின் யுத்த தர்மம், அரசியல் யுத்தி, மதிநுட்பம், போர் முறை, அரசியல் நாகரீகம்” உள்ளிட்ட பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக கவர்னர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவது குறித்த கேள்விக்கு, “ஆளுநருக்கு என்னென்ன செயல்முறைகள் உள்ளன, மாநில அரசுக்கு என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பது குறித்து அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பது சாலச்சிறந்தது. பல்வேறு இடங்களிலும் கவர்னர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி நடப்பது பிரச்னைக்கான தீர்வாக அமையும்” என்றார்.

தமிழகத்தை சேர்ந்த சுங்க வரித்துறை அதிகாரி ஒருவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, “இதுபற்றி எனக்கு தெரியாது. எனவே, தெரியாத விஷயங்கள் குறித்து பேசுவது முறையாக இருக்காது” என சுருக்கமாக பதில் அளித்து சென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
