இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலின சமையலர்களுக்கு எதிரான இந்த சாதிய மனநிலை மாறுமா? அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸிடம் கேட்டோம். “இந்தக் கொடுமை பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளிலும் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. இவற்றில் வெளியில் வருவது வெகுசில சம்பவங்கள் மட்டும்தான். சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது; சாதியத் தீண்டாமை மிகப்பெரிய குற்றம் என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது; SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த குற்றத்தைதான் சர்வசாதாரணமாக சாதிய மனோநிலைகொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பட்டியிலின சமயலர்கள்மீது நிகழ்த்துகின்றனர். அவர்கள் சாதி ரீதியில் தீண்டாமை கடைபிடித்து துன்புறுத்தல் செய்யும் கொடுமையோடு, தங்கள் சாதி வெறிக்கு அவர்களின் குழந்தைகளையும் பட்டினிபோடும் கொடுமையை செய்கிறார்கள்.
இப்படி வெளிப்படையாக பேசுபவர்கள், சட்டத்தை மதிக்காமல் ஆணவமாக செயல்படுபவர்கள்மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் தானே? இந்த குற்றவாளிகளை சிறையிலடைக்க வேண்டும் தானே? ஆனால், அரசாங்கமும் காவல்துறையும் அந்தக் குற்றவாளிகளை சரிக்கு சமமாக அமரவைத்து பஞ்சாயத்து பேசுவதுபோல அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது! பேச்சுவார்த்தையின் மூலம் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடுமென்றால் பிறகு சட்டம் எதற்கு இருக்கிறது? இதுவரை இந்த கொடுமை நிகழ்த்தியவர்கள்மீது குறைந்தபட்சம் வழக்குப்பதிவு கூட காவல்துறை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறதென்றால், அவர்கள் மீண்டும் மீண்டும் அதே தவறைத்தானே பயமில்லாமல் செய்வார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் இந்தக்கொடுமையை துணிந்து செய்வார்கள். தி.மு.க எதிர்கட்சியாக இருக்கும்போது திருப்பூர் அவினாசி பள்ளிக்கூடத்தில் நடந்த இதே கொடுமையை எதிர்த்து எப்படி பேசினார்கள், போராட்டம் செய்தார்கள். ஆனால் இப்போது ஏன் முதல்வர் ஸ்டாலின் சாதி தொடர்பாக எந்த பிரச்னை வந்தாலும் மௌனம் காக்கிறார்.
கனிமொழியும் கீதாஜீவனும் நேரில் சென்று பள்ளிக்கூடத்தில் சாப்பிட்டது வரவேற்கக்கூடிய விஷயம்தான். அதனால் பிரச்னை தீர்ந்துவிடுமா? முதலில் பள்ளியில் சமைக்கும் பட்டியலின சமயலர்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள முறையாக அனைத்துப் பள்ளிகளிலும் சாதிய கொடுமைகள் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதை செய்யவேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனது நண்பர் உதயநிதியிடம் ட்விட்டரில் விளையாடிக்கொண்டிருக்கிறார். காலை உணவுத் திட்டம் மிக அருமையான திட்டம்தான். ஆனால் அதில் சாதி புகுந்து எவ்வளவு கலங்கத்தை ஏற்படுத்துகிறது; அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொண்டு இனிமேலாவது தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்!” என குற்றச்சாட்டுகளுடன் கோரிக்கை வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com