இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் சம்பவங்களுக்கு பின்னால் பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே இருக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள், விவரம் அறிந்தவர்கள். இது சென்னையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த 16 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்த உத்தரவில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதில் கார்த்திக், ஜானி செல்லப்பா, தீபக் குமார், ராஜேஷ், விஜயகாந்த், ரத்னகுமார், பிரியதர்ஷினி, மாரியப்பன், தவமணி, ரவி, ரமேஷ் கண்ணன், சிவக்குமார், பூபதிராஜ், தேவராஜூ, ராஜேஷ், ஜானகிராமன் ஆகிய காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் உள்ளது.
எனவே குட்கா விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுகிறதா காவல்துறை என்ற கேள்வியை அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம், “காவல்துறை தலைவர் கஞ்சா 2.O வேட்டையை நடத்தினார். இதன் மூலம் கஞ்சா இருக்கிறது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அப்போது பலகோடி சொத்தை முடக்கி விட்டோம். பலரை கைது செய்துவிட்டோம் என்றார்கள். ஆனால் தற்போது கஞ்சா 4.O வேட்டையை நடத்துகிறார்கள். இதன் மூலம் இன்றைக்கும் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் நிலைமை. தற்போது 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்திற்கு பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் வருகிறது. சோதனை சாவடிகளில் முறையான காவலர்கள் இல்லை.
நன்றி
Publisher: www.vikatan.com