பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஹமாஸ் போராளிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

இஸ்ரேலியர்களை பிணைக்கைதியாகவும் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலுக்கும், சவூதி, இரான், சிரியா உள்ளிட்ட சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில், பா.ஜ.க இஸ்ரேலுக்கும், காங்கிரஸ் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்புக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,”இஸ்ரேல் போரில் ஈடுபட்டுவருகிறது.
இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றாலும், அதை முடித்துவைக்கும். எங்களைத் தாக்குவதன் மூலம், அவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருக்கிறோம் என்பதை ஹமாஸ் புரிந்து கொள்ளும். வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு அவர்களும் இஸ்ரேலின் மற்ற எதிரிகளும் நினைவில் வைத்திருக்கும் வகையில் எங்களின் தாக்குதல் இருக்கும்.

ஹமாஸும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை போன்றது தான். ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தோற்கடிக்க நாகரீகத்தின் சக்திகள் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் நாகரீக சக்திகள் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும். நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் வார்த்தைகளுக்கும், செயலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் இஸ்ரேலின் அனைத்து குடிமக்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் பல உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸுக்கு எதிராக முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com