மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை வரையறுக்கவுமில்லை. இருப்பினும், “மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு, தேசிய கல்விக் கொள்கை, அரசு போட்டித் தேர்வுகள், மத்திய அரசின் நிறுவனங்கள் போன்றவற்றில் மெல்ல மெல்ல இந்தியை நுழைத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தங்களின் கொள்கையைப்போல, ஒரே நாடு ஒரே மொழி, அது இந்தி மொழி என்பதை நிறைவேற்றத் தீவிரம் காட்டிவருகிறது” என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில்கூட, அரசியலமைப்பில் ஏற்கெனவே இருந்த சட்டங்களுக்கு இந்தியில் பெயர்மாற்றம் செய்தது பா.ஜ.க அரசு. இதைத்தான் இந்தித் திணிப்பு என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடிவருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம்கூட, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியைத் திணிக்கிறோம் என்று நேரடியாகக் கூறாமல், “இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எதுவுமின்றி இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதே அமித் ஷா, `இந்தியாவிலுள்ள மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி மொழியே ஒன்றிணைக்கிறது” என இந்தியை முன்னிலைப்படுத்திக் கூறியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com