தன்னை பிரிந்து சென்ற மனைவி முறையாக விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததாகக் கணவன் தாக்கல் செய்த வழக்கில், இந்து திருமணம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணத்தின்போது மணமக்கள் அக்னியை ஏழு முறை சுற்றிவராவிட்டால் திருமணம் செல்லாது எனக் கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
முன்னதாக, ஸ்மிருதி சிங் என்பவர் கடந்த 2017-ல் சத்யம் சிங் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அதன் பின்னர், திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கணவன் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்மிருதி சிங், தன்னுடைய கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
இதில், குற்றம்சாட்டபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, ஸ்மிருதி சிங் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட மிர்சாபூர் குடும்ப நல நீதிமன்றம், ஸ்மிருதி சிங் மறுமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு மாதம் ரூ.4,000 அளிக்குமாறு 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ல் கணவருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, சத்யம் சிங் தன்னுடைய மனைவிக்கு எதிராக ஸ்மிருதி சிங் இரண்டாம் திருமணம் செய்ததாக போலீஸில் புகாரளித்தார். இதனை சதர் பகுதி வட்ட அதிகாரி ஆய்வு செய்ததில், ஸ்மிருதி சிங் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரியவந்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com