முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க முன்னாள் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரியின் மகன் தயாநிதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த தயாநிதிக்கு டிசம்பர் 6-ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்ததோடு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கிறார்கள். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை நடைபெற்றதையடுத்து, அவரை பொது வார்டுக்கு மாற்றியிருக்கிறது மருத்துவமனை.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முன்னாள் அமைச்சர் அழகிரியும் அவரின் மனைவியும் டிசம்பர் 7-ம் தேதிதான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். வெள்ள நிவாரணப் பணிகளில் பிஸியாக இருந்த முதல்வர் நேரில் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் மருத்துவச் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார். இதற்கிடையே, தயாநிதி அழகிரியின் திடீர் உடல்நலக் குறைவுக்குக் காரணம் என்னவென்ற விசாரணையில் இறங்கினோம்.
”மூளையில் ஏற்பட்ட நரம்புப் பிரச்னை என்றார்கள். வீட்டில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததும் பதறிவிட்டோம். என்ன செய்வதென்றே சில நிமிடங்களுக்குப் பிடிபடவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டுதான் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நிலைமை சீராக இருக்கிறது. அண்ணனும் (அழகிரி), அண்ணியும் அருகிலேயே இருக்கிறார்கள். கொஞ்ச நாள்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். விரைவில் தம்பி குணமாகி வருவார்” என்றனர் தயாநிதிக்கு நெருக்கமானவர்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com