ஹைதராபாத்திலுள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, `பணியாளர்களும், பணிப்பெண்களும், டெலிவரி செய்பவர்களும் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டைப் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்’ என நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. ஹவுசிங் சொசைட்டியின் இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சமூக வலைதளப் பயனர்கள் பலரும், இந்த அறிவிப்பு தொடர்பாக தீவிர விவாதத்தில் இறங்கியிருக்கின்றனர்.

சமூக வலைதளப் பயனர் ஒருவர், “பல தொழிலாளர்களின் சம்பளத்தில் கால் பகுதி, இந்த 1,000 ரூபாய். நமக்கான வேலையைக் கடுமையாகச் செய்யும் இவர்கள், நம்முடன் இணைந்து வாழக்கூட இங்கு வழி இல்லையா?” என ஆதங்கப்பட்டிருக்கிறார். இன்னொருவர், “வெறும் 15,000 ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், அவர்கள் முதலாளியுடன் ஒரே லிஃப்ட்டில் பயணம் செய்வதற்கு 1,000 ரூபாய் அபராதமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மற்றொருவர் இந்த அறிவிப்புக்கு விளக்கமளிக்கும்விதமாக, “பெரும்பாலான சொசைட்டிகளில் நூற்றுக்கும் அதிகமான பிளாட்டுகள் இருக்கின்றன. இதில் மூன்று முதல் நான்கு மெயின் லிஃப்ட்டுகளும், ஒரு சர்வீஸ் லிஃப்ட்டும் இருக்கின்றன. டெலிவரி செய்பவர்கள் இந்த மெயின் லிஃப்ட்டுகளைப் பயன்படுத்தினால், அவசரமாகச் செல்லும் ஃபிளாட் ஓனர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், அவர்களுக்கென்று இருக்கும் லிஃப்ட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம்” என்கிறார்.

வேலைக்குச் சென்றால்தான் அடுத்த வேலை உணவு என்றிருப்பவர்கள், தங்களின் பணியிடத்தில் அடிப்படை மனித உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூட இயலாத நிலை இருக்கிறது. “அவசரத்துக்காக லிஃப்ட் சேவையை பணியாளர்கள் பயன்படுத்துவதைக் கண்டாலே, அவர்களின் சம்பளத்தில் ஒருபகுதி அபராதமாக பல இடங்களில், பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த அவலநிலை மாற வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com