உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கான ஆய்வுகளுக்கு நிதியும் குவிந்துவருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் AI துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.
சமீபத்தில், AI துறையில் பல ஆண்டு அனுபவம்கொண்ட, இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற, `AI துறையின் காட்ஃபாதர்’ என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், “எதிர்வரும் காலத்தில் AI துறையால் மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, AI என்று வரும்போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி… மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், AI மூலம் உலக நாடுகளின் தலைவர்களின் Deepfake வீடியோக்களும் சர்ச்சையாகிவருகின்றன. அது குறித்து அந்தந்த நாட்டுத் தலைவர்களே கவலை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் மோடி,”சமீபகாலமாக `Deepfake’ வீடியோக்கள் அதிகம் உருவாக்கப்பட்டு, பகிரப்படுவது பெரும் கவலையளிக்கிறது. நானே பாடலைப் பாடுவது போன்ற பல வீடியோக்கள் ஆன்லைனில் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்” என வேதனை தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “AI சாதனங்கள் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ-க்கள் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் போலிச் செய்திகளைப் பரப்பவும், மோசடி செய்யவும் பயன்படும் சூழல் நிலவுகிறது. உங்கள் குரலை மூன்று விநாடிகள் பதிவுசெய்தாலே போதும்…. அப்படித்தான் நான் பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதில், நான் சொல்லாததை நானே சொன்னதுபோல வீடியோ இருந்தது. அதைக் கேட்ட போது, `நான் எப்போது இப்படிப் பேசினேன்?’ என ஆச்சரியமாகக் கேட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போது ரஷ்ய அதிபரிடம், அவரே கேள்வி கேட்பது போன்ற வீடியோ வைரலாகிவருகிறது. ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பொதுமக்களுடனான செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்துவது வழக்கம். அதன் அடிப்படையில், நேற்றைய முன்தினம் இணைய வழி செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடன், அவரைப் போலவே தோற்றம் மற்றும் அவரைப்போன்ற குரலைக் கொண்ட AI மாடல்,”நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன். உங்களிடம் நிறைய இரட்டையர்கள் இருப்பது உண்மையா? செயற்கை நுண்ணறிவு மற்றும் நியூரல் நெட்வொர்க்குகள் நம் வாழ்வில் கொண்டுவரும், AI ஆபத்துகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டது.
அதற்குப் பதிலளித்த விளாடிமிர் புதின், “நீங்கள் என்னைப் போலவும் என் குரலில் பேசுவதையும் நான் பார்க்கிறேன். இந்த உலகில் ஒரு நபர் மட்டுமே என்னைப் போல இருக்க வேண்டும். என் குரலில் பேச வேண்டும். அது நானாக மட்டுமே இருக்க வேண்டும். சொல்லப்போனால், இதுதான் என்னுடைய முதல் இரட்டை.” எனப் பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com