அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன. முழுக்க முழுக்க லோக் சபா தேர்தலை முன்வைத்து மட்டுமே இந்தியா கூட்டணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காரணம், மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வோம் என்று கூட்டணியிலிருக்கும் எந்தக் கட்சிகளும் இதுவரை கூறியதில்லை.
இவ்வாறிருக்கவே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை நடத்தத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை காங்கிரஸ். காங்கிரஸைப்போலவே, இந்தியா கூட்டணியிலிருக்கும் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி போன்ற கட்சிகள் மத்தியப் பிரதேசத்தில் தனது வேட்பாளர் வெளியிட்டிருக்கின்றன. இதில், சமஜ்வாதி சில தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச தேர்தலில் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டிருக்கும் நிலையில், `கங்கிராஸார் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்க மாட்டேன்’ என்றும், `காங்கிரஸ் இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள்?’ என்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச தேர்தல் தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “எங்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இல்லை என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தலைவர்களை நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம். மாநிலத் தலைவருக்கு (மத்தியப் பிரதேச காங்கிரஸ்) இதில் அதிகாரமே இல்லை. மும்பை மற்றும் பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் அவர் இல்லை. இந்தியா கூட்டணி பற்றி அவருக்கு என்ன தெரியும்… காங்கிரஸிலிருக்கும் சிலர் பா.ஜ.க-வுடன் தொடர்பிலிருக்கின்றனர். மாநில அளவில் கூட்டணி இல்லை என்று தெரிந்திருந்தால், சமாஜ்வாதி தலைவர்களை திக்விஜய சிங்கிடம் அனுப்பியிருக்க மாட்டேன். அதோடு, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்கவும் மாட்டேன்” என்றார்.
அதுமட்டுமல்லாமல், இன்றும் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “சீட் கொடுக்க விருப்பமில்லையென்றால் அதனை முன்பே சொல்லியிருக்க வேண்டும். இந்தியா கூட்டணி என்பது தேசிய அளவிலான தேர்தலுக்கு என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. காங்கிரஸ் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள்… மனதில் குழப்பத்துடன் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடினால், நாங்கள் வெற்றி பெற மாட்டோம்” என்று கூறினார்.
அகிலேஷ் யாதவின் இத்தகைய கூற்றால், “டெல்லியில் (மத்தியில்) நட்பு, மாநிலங்களில் சண்டை” என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இந்தியா கூட்டணியை இன்று விமர்சித்திருக்கிறார். இன்னொருபக்கம், காங்கிரஸைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், “அகிலேஷ் யாதவின் பேச்சை விட்டுவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும், டிசம்பர் 3 அன்று மொத்தமாக ஐந்து மாநில முடிவுகளும் ஒன்றாக வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com