கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில், தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளன.
இந்த பணிக்கான பனை விதைகள் சேகரிக்கும் முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பனை விதைகள் சேகரிப்பு பணியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக முதல்வரின் ஆணைப்படி தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல் என்றும் மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை கிரீன் நீடா அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். உலக சாதனை நிகழ்ச்சியாக இது நடைபெறவுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com