தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதிக்குள் 35,941 நியாய விலைக் கடைகளிலும் அரிசி உட்பட இதர பொது விநியோகத்திட்ட பொருட்கள் இருப்பு வைத்திட துறை அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 31.10.2023 அன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், தலைமையிலான துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி உட்பட அனைத்து பொது விநியோகத் திட்ட பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட ஏதுவாக தீபாவளி வரை அனைத்து நாட்களிலும் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான நகர்வு பணிகள் அனைத்தும் நவம்பர் 5-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பொருட்கள் இருப்பு வைக்க பயன்படுத்தக் கூடிய அனைத்து சேமிப்புக் கிடங்குகளிலும் மழை நீர் கசிவு ஆகியவற்றால் பொருட்கள் சேதமாவது முற்றிலும் தவிர்க்கப்படுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். கொள்முதல் செய்யப்படும் நெல்லும் மழையினால் நனைந்து சேதமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் துறைவாரியான ஆய்வின்பொழுது, உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயலாற்றி, சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளில் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்ட இனங்களின் பணிகள் துரிதப்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் மலைப் பிரதேசங்களில் பயன்பாட்டிலுள்ள நியாய விலைக்கடைகள் வன விலங்குகள் மூலம் தாக்கப்படுவதை தடுக்க முன் கதவுகளுக்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பு அமைத்திட பரிசீலித்திட வேண்டும் என்றும் இரண்டாயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளை துரித அடிப்படையில் உடனடியாக பிரிக்கப்படுதல் வேண்டும் என்றும் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கையினைத் தீவிரப்படுத்துதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நன்றி
Publisher: 1newsnation.com