“விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்யன், ம.தி.மு.க-வில் துரை வைகோ, பா.ஜ.க-வில் ராம ஸ்ரீநிவாசன் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்…” என்று அக்ககட்சிகளின் நிர்வாகிகள் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.

தேர்தல் கமிஷன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கவில்லை, கூட்டணிக்கான முன்னெடுப்புகள் தமிழகத்தில் தற்போது தான் தொடங்கி இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்ள தி.மு.கவும் அ.தி.மு.கவும் இன்னும் ஆயத்தமாகாத நிலையில் அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், ம.தி.மு.க நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகளை தொடங்கினார்கள் என்று விசாரித்தோம்.
கூட்டணி விவகாரங்கள் தொடர்ந்து சில குழப்பங்கள் நீடிப்பதால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல மாவட்டங்களில் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் ஒரு சுணக்கம் தெரிவதாக சொல்லும் நிலையில், தென்மாவட்டத்தில் மட்டும் ஒருசிலர் நம்பிக்கையுடன் தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

“அதில் முதல் நபர் அ.தி.மு.க-வின் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வும், மதுரை மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பாவின் மகனும், அ.தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான ராஜ் சத்யன் விருதுநகர் தொகுதியை குறிவைத்து கடந்த ஓராண்டாக அங்கு வேலை செய்து வருகிறார். கடந்த முறை மதுரையில் போட்டியிட்டு கட்சியினரின் உள்ளடி வேலைகளால் சு.வெங்கடேசனிடம் தோல்வி அடைந்தார். இந்தமுறையும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதால் விருதுநகரின் அரசியல் தட்ப வெப்ப நிலையை ஐ.டி விங் மூலம் சர்வே எடுத்து, அதன் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கியுள்ளார்” என்ற அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசும்போது…
“விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். இரண்டிலுமே சிட்டிங் எம்.எல்.ஏக்களாக ராஜன் செல்லப்பாவும் ஆர்.பி.உதயகுமாரும் உள்ளனர். அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக களப்பணி செய்தால் வாக்குகளை வாங்கி விடலாம். மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் இந்தமுறை சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு ஷிஃப்ட் ஆகப்போவதாக சொல்கிறார்கள். அதனால் தி.மு.க கூட்டணியில் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு அதிகம். அவருக்காக ஆலோசனைக் கூட்டங்களை ம.தி.மு.க-வினர் ஒவ்வொரு ஒன்றியமாக நடத்தி வருகிறார்கள்.

பா.ஜ.க-வில் சீனிவாசன் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவர் கடந்த இரண்டு மாதமாக விருதுநகர் தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் ஆதரவு கேட்டு வருகிறார். தொகுதியில் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள தெலுங்கு பேசுவோரின் வாக்குகளை துரை வைகோவும், ராம சீனிவாசனும் பிரித்துக் கொள்வது தனக்கு சாதகமாக இருக்கும் என்று ராஜ் சத்யன் கணக்கு போட்டுள்ளார், அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகள் அவருக்கு முழுமையாக கிடைக்கும் என்று நம்புகிறார். கடைசி நேரத்தில் அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணி வைக்கும் நிலை ஏற்பட்டாலும், சீனிவாசன் போட்டியிலிருந்து விலகி தன் வெற்றிக்கு வழி விடுவார் என்று நம்பி, ஐ.டி விங் மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் ராஜ் சத்யன். அதே நேரம், ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் கதிரவன் போட்டியிட்டால் நாடார் சமூக வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும்…” என்றனர்.
அடுத்ததாக, மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியனை நிறுத்த செல்லூர் ராஜூ திட்டமிட்டார், அவர் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அறிமுகமாகிவிட்ட டாக்டர் சரவணன் நிறுத்தப்படுவார் என்ற தகவலே தற்போது சொல்லப்படுகிறது. பண பலமும், சமூக பலமும் அவரிடம் அதிகம் உள்ளது.

அவரால்தான் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிட்டால் கூட டஃப் கொடுக்க முடியும், இந்தமுறை தி.மு.க-வினர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் கொடுத்தால் வேலை செய்ய மாட்டார்கள் என்று அ.தி.மு.க-வினர் தெம்பாக பேசி வருகிறார்கள்.
சிவகங்கையை பொறுத்தவரையில், ‘எனக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் சீட் கேட்க மாட்டேன்’ என்று சிட்டிங் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து கூறி வந்தாலும், கட்சித் தலைவர் தேர்தலில் கார்கேக்கு எதிராக, சசிதரூர் தரப்பு ஆதரவாக வெளிப்படையாக வேலை செய்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படுவது சந்தேகம் தான் என்றே காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். ஆனால், ப.சிதம்பரத்துக்கு என்று டெல்லியில் பவர் இருக்க தான் செய்கிறது. அதனால் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு இல்லை என்று முழுமையாக மறுக்க முடியாது.

அதே நேரம் அ.தி.மு.க-வில் கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எம்.பி தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு தற்போது அமைதியாக இருக்கும் நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தொழிலதிபருமான பொன் மணிபாஸ்கரன் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறார். மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்லத் திருமணம், கோயில் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்கிறார். இவர் வீட்டு விசேசத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்பதால் தேர்தல் வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார்.
எம்.பி பதவியை நம்பி இவர்கள் இப்போது வெளிப்படையாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா இல்லையா என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com