ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் எம்.பி தீரஜ் சாஹூவுக்கு தொடர்புடைய இடங்களில் டிசம்பர் 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர்.
இதில், பௌத்தில் ராணிசாதி அரிசி ஆலை, சுந்தர்கரில் வீடு, அலுவலகம், மதுபான ஆலைகள், புவனேஸ்வரில் BDPL கார்ப்பரேட் அலுவலகம், சம்பல்பூர், போலங்கிர், தித்திலாகர், ரூர்கேலா பகுதிகள் என ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தீரஜ் சாஹூவுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் அவருக்குத் தொடர்புடைய பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில் கட்டு கட்டுகளாக ரூ.200 கோடி ரொக்கமாகப் பிடிபட்டது. பிற இடங்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த செய்தி வெளியில் தெரிந்தவுடனேயே, இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கின. அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க தலைவர்கள் பலரும் காங்கிரஸை விமர்சனம் செய்துவருகின்றனர். அதில், பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பொதுமக்களிடம் எதைக் கொள்ளையடித்தாலும், அதன் ஒவ்வொரு பைசாவையும் திருப்பித் தரவேண்டும். இதுதான் மோடியின் உத்தரவாதம்” என்று ட்வீட் செய்திருந்தார்.
அவரைத்தொடர்ந்து, பா.ஜ.க எம்.பி தீபக் பிரகாஷ், “ஒரு காங்கிரஸ் எம்.பி. வீட்டில் மட்டும் நடத்தப்பட்ட ரெய்டில் கிடைத்த பணத்தின் படங்கள்தான் இவை. அப்படியென்றால், 70 ஆண்டுகளாக நாட்டையே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கற்பனை செய்துபாருங்கள்” என்று அதிகாரிகள் கைப்பற்றிய படங்களை X சமூக வலைதளத்தில் பதிவிட்டு காங்கிரஸை விமர்சித்தார்.
மேலும், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும், “இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ என்பவர், ஊழல் செய்து முறைகேடாகக் குவித்துள்ள ரூ.300 கோடி பண மூட்டை. வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா (I.N.D.I A) கூட்டணியிலுள்ள அத்தனைக் கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள்” என்று அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தின் வீடியோவைப் பதிவிட்டு சாடியிருந்தார். இந்த விஷயத்தை மேலும் தீவிரமாகிவரும் பா.ஜ.க, இதில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com