டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டன. இன்னும் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன், ரஷ்யாவிலுள்ள பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன், ரஷ்யா என இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணிகாத்துவரும் இந்தியா, தற்போது ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறது.
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். ஜி20-யில் உறுப்பினராக இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால், போர் குறித்து இந்தியா சார்பில் கண்டிப்புடன் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com