“இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் ஏற்பட்டது போன்ற பிரச்னைகளை இந்தியா ஒருபோதும் கண்டதில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு விழாவின் 350 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இப்போது போர் நடக்கிறது. ஆனால் இந்தியா ஒருபோதும் இத்தகைய காரணங்களுக்காகப் போர் செய்ததில்லை.
ஏனெனில் இந்தியக் கலாசாரம் அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அனைத்துப் பிரிவினரையும் மதிக்கிறது. அந்தக் கலாசாரம்தான் இந்துக் கலாசாரம். உலகின் உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – ஹமாஸ் போன்ற பிற பகுதிகளில் போர் நடக்கிறது. ஆனால் நம் தேசத்தில் இதுபோன்ற சண்டைகள் ஏற்பட்டதில்லை. இது இந்துக்களின் நாடு என்றால், மற்ற எல்லா மதங்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அர்த்தமல்ல.
சிவாஜி மகாராஜா காலத்தில் நடந்த படையெடுப்புகள் அனைத்தும் அப்படித்தான். ஆனால் இந்தப் பிரச்னையில் நாம் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாம் இந்துக்கள். இந்து என்று சொன்னால், முஸ்லிம்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதை இந்துக்கள் மட்டுமே செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com