இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வெடிக்கவே, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்னொருபக்கம், மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்ற சில நாள்களிலேயே, மாலத்தீவில் இருக்கும் தங்கள் படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்று கூறவே, சீனாவுக்குப் பின்னாலிருந்து முகமது முய்ஸு செயல்படுகிறார் எனப் பேச்சுகள் அடிபட்டன. இத்தகைய சூழலில் தற்போது இந்தப் பிரச்னை வெடிக்கவே, முகமது முய்ஸு சீனாவுக்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சொந்தமில்லை, அதிலிருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சொந்தம் என முகமது முய்ஸு இந்தியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐந்து நாள்கள் சீனப் பயணம் முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பியபோது ஊடகத்திடம் பேசிய முகமது முய்ஸு, “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்களைக் கொடுமைப்படுத்துவதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்காது. இந்தியப் பெருங்கடலில் நாங்கள் சிறிய தீவுகளைக் கொண்டிருந்தாலும், எங்களிடம் 9,00,000 சதுர கி.மீ பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலம் இருக்கிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு (இந்தியா) மட்டும் சொந்தமானதல்ல. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது.
இந்தியப் பெருங்கடலின் மிகப்பெரிய பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. நாங்கள் யாருக்குப் பின்னாலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசு” என்று கூறினார். முன்னதாக, இந்த ஐந்து நாள்கள் சீனப் பயணத்தில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் முகமது முய்ஸு பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இரு நாடுகளும் தங்களுக்குள் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com