அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், மத குருக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னின்று செயல்பட்ட சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் அயோத்திக்கு செல்ல யாரது அழைப்பும் தேவையில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அயோத்தி ராமர் கோயில் தலைமை மதகுரு ஆசாரியா சத்யேந்திரா, ”விழாவிற்கு ராமரின் பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ராமர் பெயரை பயன்படுத்தி போராடுவதாக கூறுவது தவறு. நமது பிரதமர் அனைவராலும் மதிக்கப்படுகிறார். அவர் தனது ஆட்சியில் மகத்தான பணிகளை செய்துள்ளார். அது அரசியல் கிடையாது. அது அவரது பக்தி. சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறார். இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட அவர்களும் ராமரின் பெயரை பயன்படுத்தத்தான் செய்தனர். ராமரை நம்பியவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சஞ்சய் ராவத் முட்டாள்தனமாக பேசுகிறார். அவர் ராமரை அவமதிக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 16ம் தேதி தொடங்கி வரும் 22ம் தேதி முடிகிறது. 22ம் தேதி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அன்றைய தினம் யாரும் அயோத்திக்கு வரவேண்டாம் என்றும், தங்களது வீட்டிலேயே விளக்கு ஏற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com