எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் மூலமாக எங்களுக்கு பா.ஜ.க, செக் வைக்கவே நினைக்கும். அதனால்தான் எடப்பாடி பற்றி ஓ.பி.எஸ்-ஐப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். அவரும் எடப்பாடி திகார் செல்வது உறுதி எனப் பேசுவது மட்டுமல்லாமல், தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, பொதுக்குழு தொடர்பான வழக்குகள், பிரதமரிடம் ஏதோ ஃபைலைக் கொடுத்துவிட்டு, அதை எடப்பாடிக்காகக் கொடுத்தேன் என்பதுபோல பேசுவது, எனத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் மூலம் மட்டுமல்ல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்வதற்காக ஜன.,30 மற்றும் 31-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன்மூலம், நீதிமன்றங்கள் மூலமும் நெருக்கடி கொடுக்கத் தயாராகிறார்களோ என்ற எண்ணம் உருவாகிறது” என்றனர்.

”எது கள எதார்த்தமோ அதைச் சொல்கிறோம். எடப்பாடியின் வரலாறு அப்படி. எனவே, நாங்கள் சொல்வதால் அவர் சிறைக்குச் செல்வார் என்று பொருளில்லை. சசிகலா, தினகரனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கும் கட்சித் தொண்டர்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்” என்கிறார்கள் ஓ.பி.எஸ் தரப்பினர்… தேர்தல் நெருங்க… நெருங்க… இந்த அரசியல் ஆட்டத்தில் இன்னும் சூடு கிளம்பும்… என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
நன்றி
Publisher: www.vikatan.com
