மிசோரம்:
கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே சம்மந்தப்பட்ட மாநிலத்தின் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்பதே முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
இதன்படி 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சோரம் தங்கா இருக்கிறார். கடந்த தேர்தலில் எம்என்எப் 26, காங்கிரஸ் 5, பாஜக 1, பிற கட்சிகளுக்கு 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இங்கு கடத்த 7-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இங்கு மிசோ தேசிய முன்னணி – காங்கிரஸ் இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் மிசோ தேசிய முன்னணியும், விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸூம் முனைப்பு காட்டி வருகின்றன.
சத்தீஸ்கர்:
இதேபோல் 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் கடந்த 7, 17-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியது, காங்கிரஸ். முதல்வராக பூபேஷ் பாகல் இருந்து வருகிறார். இங்கு 32% அளவுக்கு பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த அரவிந்த் நேதம், ஹமர் ராஜ் கட்சி என்ற ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கட்சி 50 தொகுதிகளில் நடப்பு தேர்தலில் போட்டியிட்டிருப்பதால், காங்கிரஸூக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறும் என கூறப்படுகிறது. இருப்பினும் 2018-ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றி விட்டதால், அக்கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com