வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஐ.டி-விங் தூங்கிக் கொண்டிருக்கிறது. உருப்படியான செயல்பாடுகளே இல்லை. இதே நிலை, நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும்” என விசும்புகிறார்கள் சீனியர் கதர்கள். என்னதான் பிரச்னை?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஐ.டி விங் செயல்பாடுகள் குறித்து, சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “கட்சியின் மாநில ஐ.டி விங் தலைவராக தனக்கு வேண்டப்பட்ட லட்சுமிகாந்தன் என்பவரை நியமித்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி. பகுதி நேரமாகத்தான் ஐ.டி விங் பணியை செய்து வருகிறார் அவர். ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிக்கும், மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் லட்சுமிகாந்தன். அவர்களெல்லாம் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. கே.எஸ்.அழகிரியின் ட்விட்டர் எக்ஸ், ஃபேஸ்புக் தள பதிவுகளுக்குக்கூட சொற்பமான லைக்குள் தான் வருகின்றன. இதில் கடுப்பான அழகிரி, ‘எனக்குக்கூட ஏன் லைக் வருவதில்லை. ஐ.டி விங் செயல்படுகிறதா?’ என அணியின் நிர்வாகிகளிடம் சமீபத்தில் கடிந்துகொண்டார்.
‘பாரத் ஜோடோ’ யாத்திரையை தமிழகத்திலிருந்துதான் தொடங்கினார் ராகுல் காந்தி. யாத்திரையைப் பிரபலப்படுத்துவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தயாரித்துக் கொடுத்த வீடியோக்களைதான் வெளியிட்டார்கள். மாநில ஐ.டி விங் ஆர்வத்துடன் யாத்திரை தொடர்பான பதிவுகளைச் செய்யவில்லை. பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை அரவணைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். பா.ஜ.க-வின் தில்லுமுல்லுகள், அவர்களின் கோமாளித்தனங்களையெல்லாம் பதிவுகளாகவும் மீம்ஸ்களாகவும் வைரலாக்கி, மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் பணியில் ஐ.டி விங் செயல்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, ஐ.டி விங் மந்தமாகத்தான் செயல்பட்டது.
இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, ஜூலை 2021-ல் தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டபோது, சமூக ஊடகப் பிரிவை மேம்படுத்தும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் ஆய்வும் மேற்கொண்டார் சசிகாந்த் செந்தில். ‘நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்’ என ஆலோசனை வழங்கினார் அவர். அதற்கு, ‘லட்சுமிகாந்தனுடன் இணைந்து செயல்படுங்கள். அவர் சொல்லும்படி செய்தால் போதும்’ என்றிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதில் சசிகாந்த் செந்திலுக்கு உடன்பாடில்லை.
ராகுல் காந்தி உத்தரவின் பெயரில், கர்நாடக மாநில தேர்தலில் பணியாற்றச் சென்றுவிட்டார். அவர் வழங்கிய ஆலோசனைதான், ‘பே சி.எம்.’, ‘40% கமிஷன் சர்க்கார்’ என பல அடைமொழிகளெல்லாம். இப்படியான பிரசாரங்களால் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை கர்நாடகாவில் பெற்றது. தற்போது ராஜஸ்தான், தெலங்கானா தேர்தலில் பணியாற்றுவதற்கு சசிகாந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில், ‘புக் மை சி.எம்’ என்கிற பிரசாரத்தைச் சூட்டோடு தொடங்கிவிட்டார் சசிகாந்த். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான புதுமையான முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் ஐ.டி விங் செய்வதில்லை” என்றனர் வேதனையுடன்.
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நம்மிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியே சரியாகச் செயல்படாதபோது ஐ.டி-விங் மட்டும் எப்படி முறையாகச் செயல்படும்… கட்சியை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு ஐ.டி-விங் பலமாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு பா.ஜ.க ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் பொய்யை கூட உண்மையாக திரித்து வெளியிடுகிறார்கள். உண்மையை பேசுவதற்கு கூட காங்கிரஸ் ஐ.டி விங் தயங்குகிறது” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத்துறை மாநில தலைவர் கே.டி.லட்சுமிகாந்தனிடம் விளக்கம் கேட்டோம். “ஆக்கப்பூர்வ அரசியலுக்கும், அக்கப்போர் அரசியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் ஆக்கப்பூர்வமாக அரசியல் செய்கிறோம். மோடி, அண்ணாமலை கூறும் பொய் பிரசாரங்களை மக்களிடம் முதலில் கொண்டு செல்வது காங்கிரஸ் ஐ.டி-விங் தான். 234 தொகுதியிலும் நிர்வாகிகளை நியமித்து இருக்கிறோம். தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடக்க நாளில் மட்டும் 1.40 கோடி மக்களிடம் அதைக் கொண்டு சேர்த்தோம்.
மோடி செய்வது அனைத்தையும் மக்கள் சந்தேக கண்ணோடு பார்ப்பதற்கு, நாங்கள் தான் காரணம். தலைவர் அழகிரியின் பதிவுகள் தேர்தல் நேரத்தில் அதிகம் பேர் லைக் செய்தார்கள். தேர்தலுக்கு பிறகு அது குறைந்து விட்டது. அதுகுறித்து அழகிரி விசாரித்த போது, ‘தேர்தலுக்கு பிறகு அப்படி தான் இருக்கும்’ என அவருக்குப் புரிய வைத்தோம். தற்போது அவரது பதிவுகளை பலரும் படிக்கிறார்கள். முழுநேரமும் அலுவலகத்தில் இருந்துதான் நான் பணியாற்றுகிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com