எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசை நிலைகுலையச் செய்கிறார்கள், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் என்ற வாதத்தை மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். தற்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

மேலும், ‘மாநில அரசு அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்திடாமல், அவற்றை ஆண்டுக்கணக்கில் ஆளுநர்கள் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். ஆளுநர்கள் அரசியல் செய்கிறார்கள். வேண்டுமென்றால், அதிகாலையில்கூட முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கலைக்க அவர்கள் முயல்கிறார்கள். ஆளுநர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார்கள்’ என்றெல்லாம் கபில் சிபல் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மாநிலத்துக்கு ஆளுநர்கள் அவசியம்தானா என்ற கேள்வி அரசியல் நிர்ணய சபையிலேயே எழுந்தது. ஆளுநர் பதவி தேவையில்லை என்ற கருத்தை அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நீண்டகாலமாக முன்வைத்துவருகிறார்கள். ‘ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்றார் அண்ணா. ஆளுநர்களைத் தூக்கிச்சுமக்க வேண்டியதில்லை என்ற கருத்தையும் அரசியல் கட்சியினர் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருப்பதால், ஆளுநர் பதவி குறித்த விவாதமும் தற்போது அதிகரித்திருக்கிறது.
மேலும், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆண்டுக் கணக்கில் ஆளுநர்கள் வைத்திருக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றதாலும், ஆளுநர் பதவி பற்றிய விவாதங்கள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன. ‘ஆளுநருக்கென்று அதிகாரம் எதையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது, முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது போன்ற கடமைகளைத்தான் ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அந்த கடமைகளை சில மாநிலங்களில் ஆளுநர்கள் நிறைவேற்றுவதில்லை. ஆளுநர்கள் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று ஒரு தரப்பினர் விமர்சித்துவரும் நிலையில், தாங்கள் அதிகாரமிக்கவர்கள் என்று காண்பிக்க ஆளுநர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக இருப்பதால் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலையில்தான், ‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ என்று ஆளுநர்களை உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது போன்ற நடவடிக்கையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஈடுபட்டதால், ஆளுநருக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது. இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத்தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஆர்.என்.ரவிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரித்த கபில் சிபல், ‘எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இந்துத்துவா திட்டங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்கள். நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள். வெறுப்பைத் தூண்டுகிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்பது சரிதான்’ என்று கபில் சிபல் கூறினார்.

தற்போது, ’ஆளுநர் பதவி தேவைதானா?’ என்ற கேள்வியை கபில் சிபல் எழுப்பியிருக்கிறார். ‘ஆளுநர் பதவி முற்றிலும் அலங்காரப் பதவி. நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஆளுநர்கள் குறித்து சட்ட மேதை அம்பேத்கர் கூறிய கருத்தை கபில் சிபல் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கருத்தின் தொடர்ச்சியாகவே ’ஆளுநர் பதவி தேவைதானா?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் கபில் சிபல்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com