கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு எந்வொரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நிறுத்தவும், சீல் வைக்கவும் கடந்த 2012ஆம் ஆண்டில் அரசு பிறப்பித்த உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி ஈஷா தரப்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி வழங்கியது, வழிபாட்டு தளத்திற்கான சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வாத பிரதிவாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், உரிய அனுமதி பெற்றிருக்காவிடில் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com