கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை வீசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2023 அக்டோபரில், பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், தெற்கு இஸ்ரேலுக்குள் ஊடுருவி சுமார் 1,140 நபர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸாவை முழுமையாக முற்றுகை செய்யப்போவதாக அறிவித்ததோடு, காஸாவிற்கு உணவு, தண்ணீர், எரிப்பொருள், மின்சாரம் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் சென்றடைவதையும் தடைசெய்தது. இதனுடன், எகிப்தின் கட்டுப்பாட்டிலுள்ள ரஃபாவைத் தவிர, அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. அதன் பிறகு காஸா மக்கள்மீதான இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்தது.
அல்-ஜசீரா அறிக்கையின்படி, அக்டோபர் 7, 2023 முதல், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை காஸா மக்கள்மீது வீசி… கிட்டத்தட்ட 24,000 பேரைக் கொன்றிருக்கிறது. `இஸ்ரேல் தாக்குதலில் அதிக அளவில் குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்திருக்கிறார்கள்” என்று காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஹமாஸுடனான ஏழு நாள்கள் போர்நிறுத்தத்தின்போது, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 240 பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, சுமார் 121 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, மீண்டும் இஸ்ரேலுக்கு அழைத்துவரப்பட்டனர். இருப்பினும், போர் தீவிரமடைந்து வருவதால், சுமார் 100 பணயக்கைதிகள் காஸாவில் சிக்கியுள்ளனர்.
காஸாவில் 45 முதல் 56 சதவிகித கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சில கட்டடங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. ஏறக்குறைய 69 சதவிகித பள்ளிகள் இந்தப் பகுதியில் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக காஸாவில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், காஸாவில் சுமார் 142 மசூதிகள் மற்றும் 3 தேவாலயங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
நன்றி
Publisher: www.vikatan.com