இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல், தொடர்ந்து போர் நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்து பாலஸ்தீன குடிமக்கள் தங்கிவருகிறார்கள். மத்திய காஸாவிலுள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும், போதிய மருத்துவ சிகிச்சை, உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஸாவின் உள்கட்டமைப்பு பெரிதும் சிதைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் (Eli Cohen), “எங்களின் முக்கியக் கூட்டாளிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், சர்வதேச ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும். தற்போதைய நிலையில், போர் நிறுத்தம் என்பது பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஒரு பரிசாகும். அதனால், அது திரும்பவும் இஸ்ரேலில் வசிப்பவர்களை அச்சுறுத்த வாய்ப்பிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், இஸ்ரேல் சிறைபிடித்திருக்கும் பிணைக்கைதிகளில் மூன்றுபேரைச் சுட்டுக்கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேலின் ஜெனரல் ஸ்டாஃப் மேஜர் ஜெனரல் ஹெர்சி ஹலேவி வெளியிட்டிருக்கும் ஒரு காணொளியில், “காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் 1,000-க்கும் மேற்பட்டவர்களைச் சிறைபிடித்திருக்கிறோம். எங்களிடம் உள்ள கைதிகளிடமிருந்து எங்களுக்கு நிறைய உளவுத் தகவல்கள் கிடைக்கிறது.
எனவே, இவர்களை விடுவிக்க வேண்டுமானால், ஹமாஸ் போராளிக்குழு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைந்தால் மட்டுமே விடுவிப்போம். போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கைகளை உயர்த்தும்போது, நாங்கள் அவர்களைக் கைது செய்கிறோம், நாங்கள் அவர்களைச் சுடுவதில்லை. நாங்கள் சொல்வதைச் செய்தால் மட்டுமே, பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com