எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகியதற்கு நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், “பீகாரில் மகாபந்தன் கூட்டணி முடிந்தது. அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டேன். இந்தியா கூட்டணியில் சூழ்நிலை சரியில்லை. இந்தியா கூட்டணியை உருவாக்க முயன்றோம். ஆனால் அது சரிவரவில்லை.. இந்தியா கூட்டணியில் எந்த வேலையும் நடக்கவில்லை. எதுவுமே சரியில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து காங்கிரஸ் ஏற்கெனவே கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி அளித்த பேட்டியில்,’ “காங்கிரஸ் இந்தியா கூட்டணியை அபகரிக்க முயல்கிறது.
இந்தியா கூட்டணியின் தலைமையை திருட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் சதி செய்கிறது. டிசம்பர் 19-ம் தேதி நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதம வேட்பாளராக்க சதி நடந்து. சதி மூலம் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பெயரை பிரதம வேட்பாளருக்கு முன்மொழிந்தார்.
தொகுதி பங்கீட்டிலும் காங்கிரஸ் இடையூறு செய்தது. தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் இழுத்துக்கொண்டே இருந்தது. பா.ஜ.க-வை எதிர்த்து போராட இந்தியா கூட்டணியில் சரியான திட்டம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை நிதிஷ் குமார் 9-வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் பா.ஜ.க-வை சேர்ந்த சாம்ராட் சவுதரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com