விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு வேலைகளில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். ‘இந்த மாநாட்டில் நிச்சயம் பங்கேற்போம்’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.எம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ டி.ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உறுதிசெய்துவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையிடமிருந்து மட்டும் இன்னும் எந்தத் தகவலும் வரவில்லையாம். “சனாதனம் குறித்து உதயநிதி பேசியது ஏற்கெனவே தேசிய அளவில் தங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விஷயத்தில் திருமா வேகம் காட்டுபவர். வி.சி.க ஏற்பாடு செய்யும் மாநாட்டில் பங்கேற்று, அதிலும் சனாதனம் குறித்து யாராவது பேச நேரிட்டால் தேர்தல் நேரத்தில் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்” என்று யோசிக்கிறதாம் காங்கிரஸ் கட்சி. அதேநேரத்தில், மாநாட்டில் கலந்துகொள்ளவில்லையென்றாலும் தமிழ்நாட்டிலிருக்கும் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என்பதால், முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை.

சென்னை நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், ‘வீரமான’ மாஜி அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. நிலத்தைப் பறிகொடுத்தவர், தனது நிலம் தனக்குத் தெரியாமலேயே பத்திரப்பதிவு செய்யப்பட்டதை நீதிமன்றத்தில் நிரூபித்து, அந்த மோசடி ஆவணங்களை ரத்துசெய்யும் உத்தரவையும் பெற்றுவிட்டார். இதனால், பிரச்னை சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில், அந்த இடத்தை மீண்டும் அபகரிக்கும் நோக்கில் மாஜிக்கு நெருக்கமானவர் நில உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தொல்லை அதிகமாகவே அந்த நில உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுக்க, நெருக்கடி கொடுத்தவரை சமீபத்தில் கைதுசெய்திருக்கிறது போலீஸ். இதெல்லாம் உளவுத்துறை மூலம் மேலிடத்துக்குச் செல்ல, “இந்த விவகாரத்தில் மாஜிக்கும் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா?” என்பதைக் கண்டறியச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்களாம். அப்படித் தொடர்பு இருப்பது தெரியவந்தால், அதைவைத்தே அந்த மாஜியை முடக்கிவிடலாம் என்கிறரீதியில் காய்நகர்த்திவருகிறதாம் ஆளும் தரப்பு.
தீபாவளியையொட்டி கவுன்சிலர்களைவைத்து, தீயாக வேலை செய்திருக்கிறார் மஞ்சள் மாநகராட்சியின் நம்பர் ஒன் பிரமுகரின் நெருங்கிய உறவினர். ஜவுளிக்கடைகள், சாயப்பட்டறைகள், கல்வி நிறுவனங்கள் என ஒவ்வொன்றுக்கும் இத்தனை லட்டுகள் என நிர்ணயம் செய்து, கவுன்சிலர்கள் மூலமே பல ஸ்வீட் பாக்ஸுகளை வசூல் செய்திருக்கிறாராம் அவர். “மொத்தமாக வசூல் செய்வோம்… எவ்வளவு வருகிறதோ அதில் 50 சதவிகிதத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு மீதத்தை எனக்குக் கொடுத்தால் போதும்” என ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார் அவர். ஆனால், வேலை முடிந்ததும் வசூலானதில் வெறும் 10 சதவிகித லட்டுகளை மட்டுமே மாமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்துப் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டாராம் அந்த உறவினர்.
இது குறித்துக் கேட்டபோது, “மாவட்ட மாண்புமிகுவுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்தது போக எனக்கே சொற்பமான லட்டுகள்தான் மிஞ்சின” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார் அவர். இந்த விவகாரத்தை மாவட்ட அமைச்சரின் காதுக்குக் கொண்டு சென்ற மாமன்ற உறுப்பினர்கள், “எங்களைவைத்து வசூல் செய்துவிட்டு எங்களையே ஏமாற்றிவிட்டார்” எனக் கொந்தளித்துவிட்டார்களாம்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு தொகுதிப் பக்கம் வந்த ஆளுங்கட்சியின் மன்னர் புள்ளி, நகர்மன்ற உறுப்பினர்கள் தொடங்கி, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாக அழைத்து, உள்ளூர் அரசியல் நிலவரம் குறித்து ஆர்வமாக விசாரித்திருக்கிறார். உட்கட்சிப் பிரச்னைகள் குறித்து பலரும் சொல்லிப் புலம்பியிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த அவர், சொல்லப்பட்ட புகார்களின் தீவிரத்தின் அடிப்படையில் புகாருக்குள்ளானவர்களை அழைத்து `செம டோஸ்’ விட்டாராம். அதோடு நிற்காமல், மாவட்டச் செயலாளரை அழைத்து, “கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நிர்வாகிகளைக் கட்சியைவிட்டு நீக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் பதவிக்கே சிக்கலாகிவிடும்” எனவும் எச்சரித்தாராம். “தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தாவிட்டால்கூடப் பரவாயில்லை… தேவையில்லாமல் மனச்சங்கடத்துக்கு ஆளாக்குகிறார் மன்னர் பிரமுகர்” எனக் கொதிக்கிறார்கள் ஆளுங்கட்சியின் மாவட்டக் கழக நிர்வாகிகள்.
யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் தீபாவளியைக் கோலாகலமாக கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., சுயேச்சை மற்றும் நியமன எம்.எல்.ஏ-க்கள் எனக் கட்சி பேதமின்றி அங்கிருக்கும் 33 எம்.எல்.ஏ-க்களுக்கும், தலா 500 பட்டாசு பாக்ஸுகளையும், 500 கிலோ இனிப்புகளையும் வழங்கி திக்குமுக்காட வைத்துவிட்டதாம் முதன்மையானவர் தரப்பு. அத்துடன் தீபாவளிச் செலவுக்கு ஐந்து லட்டுகளையும் கொடுத்து அசத்திவிட்டார்களாம். அமைச்சர்களைக் கூடுதலாக கவனித்திருப்பதுடன், ஆளுநர் மாளிகைக்கும் அதே தாராளத்தைக் காட்டியிருக்கிறதாம் முதன்மையானவர் தரப்பு. இது தவிர அரசு உயரதிகாரிகளையும் பரிசு மழையால் குளிப்பாட்டிவிட்டார்களாம். முதன்மையானவர் தரப்பின் இந்தத் திடீர் உற்சாகத்துக்குக் காரணம் என்ன என்று புரியாமல் கலக்கத்தில் இருக்கிறதாம் பா.ஜ.க!
நன்றி
Publisher: www.vikatan.com