அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு கட்சியினரின் ஏகோபித்த முடிவு என்று துணிவானவர் சொன்னாலும், கொங்கில் நடக்கும் சில காரியங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனவாம். குறிப்பாக, ‘இதுவரை தலைமைக்கு ஆதரவாக இருந்த மணியானவர், தற்போது தாமரை தரப்புடன் கூடுதல் நெருக்கம் காட்டுகிறார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டேபோல அவர் ஆகிவிடுவார்’ எனச் செய்திகள் பரவ, வெலவெலத்துப் போயிருக்கிறதாம் துணிவானவர் கூடாரம். “ஆட்சியைக் காப்பாற்றியது முதல் தலைமையைக் கைப்பற்றியது வரை நமக்கு உறுதுணையாக இருந்தது நம்ம மணிதான். அப்படியெல்லாம் நமக்குத் துரோகம் செய்துவிட மாட்டார்” என சேலம் கேம்ப் ஆபீஸில் பேசிக்கொண்டாலும், உள்ளுக்குள் ‘ஒருவேளை இருக்குமோ…’ என்ற பயம் துணிவானவருக்கு இருக்கத்தான் செய்கிறது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். இந்த சந்தேகத்தை உடைக்கவே, ‘அவரு கிணத்துல குதிக்கச் சொன்னாலும் குதிப்போம்’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் மணியானவர். ஆனால், கொங்கு மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர், மத்திய அமைச்சரைச் சமீபத்தில் சந்தித்திருப்பது துணிவானவரின் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறதாம்.
நன்றி
Publisher: www.vikatan.com