சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று பேசியதுடன், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக இ.பி.எஸ் குற்றம் சாட்டியதை டெல்லி சுத்தமாக ரசிக்கவில்லை. அங்கிருந்து மணியானவருக்கு போன் போட்டுப் பேசியவர்கள், ‘‘தேர்தல் நேரத்தில் உறவு சரியாகிவிடும் என்றீர்கள். ஆனால், இ.பி.எஸ் இப்படிப் பேசியிருக்கிறாரே… இதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா?” எனக் கேட்க, அரண்டு போய்க் கிடக்கிறதாம் மணியானவர் தரப்பு.

உடனடியாக சேலத்துக்குச் சென்று இ.பி.எஸ் தரப்பிடம் டெல்லியின் வருத்தத்தை கவலையோடு சொன்னாராம் மணியானவர். இதில் கடுப்பான இ.பி.எஸ் தரப்பு, “அவங்கள சந்தோஷமா வச்சுக்கிறது நம்ம வேலையில்ல. அவங்களை விமர்சிக்காம தமிழ்நாட்டுல நாம அரசியல் பண்ண முடியாது. அதனால இனிமேலும் இப்படித்தான் பேசுவோம்” என முகத்தில் அடித்தார்போலச் சொல்லிவிட்டதாம். “அவருக்கென்ன பேசிவிட்டார்… அகப்பட்டவன் நானல்லவா?” என்று புலம்பிக்கொண்டிருக்கிறதாம் மணியானவர் தரப்பு.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், “நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் அனைத்தும் மோசமாக இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவற்றைச் சரிசெய்யவில்லை என்றால், தோல்விக்கு அதுவே காரணமாகிவிடும். எனவே, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். “சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நீர் ஆதாரங்களையும் தூர்வாரிப் பராமரிக்கும் பணிகளையும் மாநகராட்சியே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதையறிந்து அந்த இரண்டு துறைகளின் அமைச்சர்களும் கடுப்பாகிவிட்டார்களாம். “அந்த மீசைக்கார அமைச்சர் தன்னோட துறையை முதல்ல ஒழுங்கா கவனிக்கட்டும். அதைவிட்டுட்டு, நமது துறைக்குள்ள அவருக்கென்ன வேலை… அவரு கல்லா கட்டுறதுக்கு இவங்களைத் தூண்டிவிடுகிறாரா?” என சீறியிருக்கிறார்கள் இரண்டு அமைச்சர்களும். விரைவில் இது பெரிய விவகாரமாக வெடிக்கும் என்கிறார்கள் ரிப்பன் மாளிகை வட்டாரத்தில்!
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சத்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டார்கள். பிரதான கட்சி என்ற முறையில் நாடு முழுக்க குறைந்தது 200 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் அதற்காக, தமிழ்நாட்டில் கடந்த முறையைவிட கூடுதல் சீட் கேட்டிருக்கிறார்கள்.

“என்னது 15 சீட்டா… போன முறை ஜெயிச்ச 9 தொகுதியையாவது இந்த முறை காப்பாத்திக்க முடியுமான்னு பாருங்க!” என்று சட்டென சொல்லிவிட்டதாம் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான சீட்டை குறைப்பதற்காகத்தான் பா.ம.க ராமதாஸ் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பே நடந்தது என்றும் கண் சிமிட்டுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
சென்னையில் சைக்கிள் ஓட்டி பிரபலமான பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சமீபத்தில் தென்மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கு வேலைசெய்ய அவருக்கு விருப்பமே இல்லையாம். எனவே, மீண்டும் சென்னைக்கே திரும்ப உதவுமாறு தலைநகர ‘பொட்டு’ அமைச்சர் ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறாராம் அந்த அதிகாரி.
“நம்ம சொந்தக்காரப் பொண்ணாச்சே… உங்களுக்குச் செய்யாமலா?” என அமைச்சரும் வாக்குக் கொடுத்துவிட்டாராம். விரைவில் சென்னையிலேயே நல்ல போஸ்டிங் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தென்மாவட்டத்தில் உற்சாகமாக சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகிறார் அந்தப் பெண் அதிகாரி.
காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் சிபாரிசில்தான் கும்பகோணம் மாநகராட்சி மேயர் ஆனார் சரவணன். ஆனால், கட்சி வளர்ச்சி நிதி விஷயத்தில் இருவருக்குள்ளும் மோதல் முற்றிவிட்டது. இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் புகார் தெரிவித்த சரவணன், பேசாமல் தன்னையே மாவட்டத் தலைவர் ஆக்கிவிடும்படி கோரிக்கை வைத்தாராம். இந்தத் தகவல் லோகநாதன் கவனத்துக்கு செல்ல, “என் பதவிக்கே வேட்டு வைக்கப் பார்க்கிறாரா… ஆட்டோ டிரைவராக இருந்த சரவணனை மேயர் ஆக்கத் தெரிந்த எனக்கு, அதை எப்படி பறிப்பது என்றும் தெரியும்” எனப் பொங்கியிருக்கிறார்.

மேயர் சரவணனும், “லோகநாதனின் அட்ராசிட்டிகளை நான் பட்டியல் போட்டால், காங்கிரஸ் கட்சியே கிடுகிடுத்துவிடும்” எனப் பதிலடிக்குத் தயாராகி வருகிறாராம். “இருவரையும் எப்படிச் சமாதானம் செய்வது எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது சத்தியமூர்த்தி பவன்” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com