ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சொந்தச் சமூகத்தினரின் எதிர்ப்பையும் தாண்டி தனக்குத் துணை நின்றதால், அந்த மதுரை மாஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக்கினார் துணிவானவர். ‘சீனியர்கள் பலர் இருக்க, பணிவானவரின் பதவியை தென்னகத்தின் தளபதியான மதுரை மாஜிக்கே கொடுத்திருக்கிறேன்’ என்று சொல்லியே செலவு பிடிக்கும் வேலைகளையெல்லாம் மதுரைக்காரரின் தலையில் கட்டினாராம் துணிவானவர். ஆனால், ஒன்றே கால் ஆண்டுகள் ஆகியும் ஒரு நாள்கூட அந்த மதுரைக்காரரால் சட்டமன்றத்தில் தன் பதவிக்குரிய நாற்காலியில் உட்கார முடியவில்லை. ஆரம்பத்தில், ‘அந்த நாற்காலியிலிருந்து பணிவானவரை எழுப்புங்கள்’ என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த துணிவானவர், இப்போது சுத்தமாக அதை மறந்துவிட்டாராம். சமீபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அந்த நாற்காலியையே ஏக்கமாகப் பார்த்த மதுரை மாஜியிடம், ‘விடுப்பா… பார்த்துக்கலாம்’ என்று துணிவானவர் ஆறுதல்கூட சொல்லவில்லையாம். “கன்றுக்குட்டி செத்துப்போன பிறகும், அதன் தோலால் செய்யப்பட்ட வைக்கோல் கன்றுகுட்டியைக் காட்டி பால் கறப்பதுபோல, இன்னமும் என்னிடம் கறந்துகொண்டிருக்கிறார் துணிவானவர். எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது” என்று மதுரைக்காரர், தன் சகாக்களிடம் புலம்பித்தள்ளிவிட்டாராம். அதன் பிறகே சபாநாயகர் முன் தர்ணா, அவையிலிருந்து வெளிநடப்பு என வேகம் காட்டியதாம் துணிவானவர் தரப்பு!
நன்றி
Publisher: www.vikatan.com