தென்மேற்குப் பருவக்காற்றுக்குப் பெயர்போன அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் எண்ணெய்யும், தண்ணீரும் போலத்தான் இருக்கிறதாம். ‘அவரு இன்னும் அ.தி.மு.க-காரராவே இருக்கார்பா…’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்களாம் உடன்பிறப்புகள். இவரும், ‘அடுத்த வாட்டி தி.மு.க ஆட்சிக்கு வராதுப்பா!’ என்று தன் ஆதரவாளர்களிடம் உளறியிருக்கிறார் போல. இதுபோதாது என எல்லைதாண்டிய அரசியல், மாவட்ட தி.மு.க-வினர் அ.தி.மு.க-வில் சேர்ந்தது போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ள, தலைமைக் கழகத்திலிருந்து லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார்களாம். அதனால், ‘நீ மறுபடியும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி!’ என அவரது ஆதரவாளர்கள் கொம்பு சீவிவிட, அ.தி.மு.க-வின் துணிவான தலைவரிடமே தூதுவிட ஆரம்பித்துவிட்டாராம் தங்கம். ‘மாவட்ட செயலாளர் பதவி… அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சீட்’ என்ற நிபந்தனையோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறாராம் அவர்!
தாமரைக் கட்சியின் மாநிலத் தலைமை நடத்தும் பாதயாத்திரைக்கான மவுசு படிப்படியாக குறைந்துகொண்டே போகிறதாம். இது அவரை ரொம்பவே அப்செட்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் கமலாலயத்தில். ‘பாதயாத்திரைக்கு கூட்டம் சேராததற்கு நம் நிர்வாகிகளில் சிலருக்கும் பங்கிருக்கிறது. சுய லாபத்துக்காக ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து இப்படிச் செய்பவர்கள் குறித்து எனக்குத் தெரியாமல் இல்லை. அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள்…அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்’ எனப் புலம்புகிறாராம் அவர். இன்னொரு புறம், ‘அண்ணன் பாதயாத்திரை வருகிறார்… நன்கொடை கொடுங்க’ என்றரீதியில் ஒரு கும்பல் வசூல்வேட்டையாடிவிட்டு கம்பி நீட்டிவிடுவதாகவும் புகார்கள் குவிகின்றன. ‘பேசாம நாம் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கு மட்டும் பாதயாத்திரை போங்கன்னு சொன்னா அவரு எங்க கேட்கிறாரு?’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்களாம் கட்சி சீனியர்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடப் போவதாக கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த கமல்ஹாசன், ‘வேலையைத் தொடங்குங்க பார்த்துக்கலாம்’ என்றும் சிக்னலும் கொடுத்திருந்தாராம். தலைவரின் உத்தரவை சிரமேற்கொண்டு பூத் கமிட்டி தொடங்கி மாவட்ட பொறுப்பாளர்கள் வரை நியமித்து, தேர்தல் வேலையில் தீவிரம் காட்டியிருக்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… கடந்த பத்து நாள்களாக கோவையில் ‘அமைதியோ அமைதி’ என்ற நிலைக்குச் சென்றுவிட்டார்கள் கட்சி நிர்வாகிகள்.
விசாரித்தால், ‘‘கோவை தொகுதியை தன்வசம் வைத்திருக்கும் சி.பி.எம்., தொகுதியை ம.நீ.ம-வுக்கு விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது. எதற்கு தேவையில்லாத பிரச்னை என்று தி.மு.க-வும் யோசிக்கிறது. கோவையை விட்டுவிட்டு தென்சென்னையைக் கேட்டுப்பெற்றால் சினிமா வேலைகளும் அதிகம் கெடாதே என்று கமலும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார். பிறகு நாங்கள் என்ன செய்வது?’’ என்று கையைப் பிசைகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் அன்று கட்சியினர் வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பதால், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் முதல்நாளே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டார்களாம். அதிலும் சென்னையில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கட்சிக்காரர்களை ஓவர்டேக் செய்யுமளவுக்கு குழைந்ததுதான் அதிகாரிகள் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாப்பிக். கூடவே, ‘வருங்கால சி.எம்!’ என பில்டப் கொடுத்து உதயநிதிக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருக்கிறாராம் அவர். ‘அடுத்த சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறார் மனிதர்’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!
தென் மாவட்டம் ஒன்றில் பா.ஜ.க இளைஞரணி தலைவராக இருந்தார் லீலைகளின் கடவுள் பெயர் கொண்ட ஒருவர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னான பெண் ஒருவர் இளைஞரணியில் மாநில நிர்வாகியாக இருந்தார். திருமணமான மாவட்ட இளைஞரணி தலைவருக்கும், திருமணம் ஆகாத மாநில பெண் நிர்வாகிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
விவகாரம் அரசல் புரசலாக வெளியே கசிந்ததையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேரிடமும் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்திருக்கிறது மாவட்ட பா.ஜ.க தலைமை. வாழ்க்கையும் போய், கட்சிப் பதவியும் போய்விட்டதே என்ற விரக்தியில், ‘மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தவரை நம்பி நடு வீதிக்கு வந்துவிட்டேன்!’ என ஃபேஸ்புக்கில் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி. இதையடுத்து விவகாரம் கமலாலயம் வரைக்கும் போயிருக்கிறது. விவகாரம் பெரிதாக வெடிக்க ஆரம்பித்ததும் சட்டென அந்தப் பதிவை நீக்கிவிட்டார் பெண் நிர்வாகி. ஆனாலும், விசாரணை என்ற பெயரில் லீலை தலைவரை படுத்தியெடுக்கிறார்களாம் மேலிடத்து ஆட்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com