தி.மு.க-வின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பெரும்பாலான மாவட்டங்களில் சொதப்பியிருக்கிறது. “மூன்று அணிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம்… ஒவ்வோர் அணிக்கும் எல்லா மாவட்டங்களிலும் குறைந்தது 30 பேராவது நிர்வாகிகளாக இருப்பார்கள். அவர்களெல்லாம் தலா ஒருவரைப் போராட்டத்துக்கு அழைத்து வந்திருந்தால்கூட, 400 பேருக்குக் குறையாமல் கூட்டம் கூடியிருக்கும்.
எல்லாருமாகச் சேர்ந்து ஏமாற்றிவிட்டார்கள்” என்று உதயநிதிக்குப் புகார் போயிருக்கிறது. எனவே, “எந்தெந்த மாவட்டத்தில், யார் யார் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்… மொத்தம் எத்தனை பேர் பங்கேற்றார்கள்… என்பன போன்ற விவரங்களையெல்லாம் புகைப்பட ஆதாரங்களுடன் ரிப்போர்ட்டாக அனுப்பச் சொல்லி அன்பகத்திலிருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம். இதனால் பல மாவட்ட உடன்பிறப்புகள் திகிலில் இருப்பதாகத் தகவல்.
குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. `சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே வருகிறார்’ என்று சொல்லித்தான் இந்த வேட்டை நடக்கிறதாம். சொந்தக் கட்சியினர், கூட்டணிக் கட்சியினர், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் உண்டியல் குலுக்குவது மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான மேயர் மற்றும் மாவட்டத் தலைவர் தரப்புதானாம். “ஏற்கெனவே நாங்கள் பொதுக்கூட்டம் நடத்தியபோது, போலீஸில் புகார் கொடுத்து தடுத்து நிறுத்தியவர்கள், இப்போது அகில இந்திய தலைமையிடம் ‘டேட்’ வாங்காமலேயே வசூல் வேட்டை நடத்துகிறார்களே… இதைக் கேட்க நாதியில்லையா?” என்று ஒரு குரூப் சத்தியமூர்த்தி பவனில் முறையிட்டிருக்கிறது. “தேவை ஏற்பட்டால் டெல்லிக்கே போய் புகார் கொடுப்போம்’’ என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.
திருப்பமான மாவட்டத்திலுள்ள ‘ஜோரான’ நகரத்தை போதைப்பொருள் விற்பனையால் சீரழித்துக்கொண்டிருக்கிறாராம் ஆளுங்கட்சியின் நகர இளைஞரணி நிர்வாகி. கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ‘முதல்’ குற்றவாளியாக இவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆளுங்கட்சி தயவிருப்பதால் அடங்காமல் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாராம் இவர். 90 மில்லி அளவுகொண்ட கர்நாடக சாராய பாக்கெட்டுகளை லோடு லோடாகக் கடத்தி வந்து, நகரம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புவதே இவரது பிரதான வேலை என்கிறார்கள்.
சமீபத்தில், இவரின் ஆட்கள் இரண்டு பேரை போதைப்பொருள் விற்பனை வழக்கில் தட்டித்தூக்கிய காக்கிகள், அந்த வழக்கில் ‘ஏ-1 அக்யூஸ்ட்டாக’ இளைஞரணிப் பிரமுகரின் பெயரைச் சேர்த்துவிட்டார்கள். இதனால் கடுப்பான இளைஞரணிப் பிரமுகர், ‘மாசா மாசம் கரெக்ட்டா மாமூல் தந்துடுறேன்… அப்படியிருந்தும் ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க?’ என்று போலீஸாரிடம் பொங்கியிருக்கிறார் அவர். ‘அட, சும்மா இருங்க சார்… விஷயம் மேலிடத்துக்குப் போயிடுச்சு… கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க’ என்று எச்சரித்திருக்கிறாராம் கைநீட்டும் பழக்கம்கொண்ட லோக்கல் ‘லேடி’ இன்ஸ்பெக்டர்.
அ.தி.மு.க மாநாடு சக்சஸ் விழாவுக்குத் தயாராக இருந்த எடப்பாடி கூடாரத்தில் இடியை இறக்கியிருக்கிறது உணவு விவகாரம். காரணம், மதுரை மாநாட்டுத் தீர்மானங்களைவிட, புளியோதரை கெட்டுப்போய் டன் டன்னாக வீணாகக் கொட்டப்பட்ட செய்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி, விமர்சனத்துக்குள்ளாகியிருப்பது எடப்பாடியை அப்செடாக்கியிருக்கிறது. “புரட்சித் தமிழர் பட்டம் வாங்க 300 கோடி செலவழிச்ச மகாராசன், சாப்பாட்டு விஷயத்துல கஞ்சத்தனம் காட்டி புளியோதரைத் தமிழராகிட்டாரே?” என்ற விமர்சனமே அவரது அப்செட்டுக்குக் காரணமாம்.
உணவுக்குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் காமராஜை அழைத்து, “ஏங்க… சாப்பாட்டு விஷயத்துல இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருக்கறது… கேவலம் ஓ.பி.எஸ்-கூட விமர்சிக்கிற அளவுக்கு ஆக்கிட்டீங்களே?” என்று கண்டித்தாராம் எடப்பாடி. கூடவே, மதுரை ஆர்.பி.உதயகுமாரையும் தொடர்புகொண்டு, “ஏங்க… நீங்களாச்சும் இதை கவனிச்சிருக்கக் கூடாதா?” என்று வருத்தப்பட்டாராம் எடப்பாடி.
ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் மாநாடு முதல்வருக்கு மனநிறைவைத் தரவில்லையாம். உள்ளூர் மீனவர்கள் உட்பட பல சங்கங்கள் மாநாட்டைப் புறக்கணித்ததும், தி.மு.க அரசு கவனிக்கத் தவறிய மீனவர் பிரச்னைகள் என்று அடுக்கடுக்காக வந்த புகார்களும்தான் இதற்குக் காரணமாம்.
தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் மீனவ கிராமத்தில் 12 நாள்களாக நடந்த மீனவர்கள் போராட்டம்கூட, மாநாட்டுக்கு முந்தைய நாள் இரவில்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்ற தகவல், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா மீது முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாம்.
“இந்தப் பிரச்னைகளெல்லாம் இருப்பது உங்களுக்கு முன்னாடியே தெரியாதா… உங்கள் மீதும், உங்கள் துறைமீதும்தான் அதிக புகார்கள் வருகின்றன” என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போனில் அழைத்து கடிந்துகொண்டதாம் மேலிடம். ஏற்கெனவே அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அலையடிப்பதால், எங்கே நம் துறையில் கைவைத்துவிடுவார்களோ என்று கலக்கத்தில் இருக்கிறாராம் அமைச்சர்.
நன்றி
Publisher: www.vikatan.com