சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி, அதையொட்டியுள்ள 16 ஏக்கர் அளவிலான நிலம் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமானதுதான். அதையெல்லாம் ஒருங்கிணைத்து, `மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில்’ ஒரு மிகப் பெரிய திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம்!” எனத் தெரிவித்திருந்தார். அப்படி என்ன மக்களுக்குப் பயன்படும் மாதிரியான பெரிய திட்டம்? என பலரும் பலவாறு எதிர்பார்த்து பேசிக்கொண்டிருந்த நிலையில், அதுதொடர்பாக தற்போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
`அபுதாபி தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்ப்பா?’ – அதிர்வலையை ஏற்படுத்திய அன்புமணி ராமதாஸ் அறிக்கை:
கோயம்பேடு விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது. சென்னை மாநகரின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து வரும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழக அரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம் தான் என்று கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதை நான் கண்டித்த உடன் அதை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் போது கோயம்பேடு பேருந்து நிலையம் அபுதாபி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும். இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி. நிலத்தின் மதிப்பு முதலீட்டைவிட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது!” எனத் தெரிவித்திருந்தார்.
`இது அன்புமணியின் தலைசிறந்த நகைச்சுவை’ – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்:
இந்த நிலையில் அன்புமணியின் அறிக்கைக்கு விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இன்னும் திருமணமே முடியாமல் குழந்தைக்கு பெயர் வைப்பதா? இன்னும் அந்த இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு சேக்கை மேற்கோள் காட்டி இருப்பது விசித்திரமாக உள்ளது. இந்த ஆண்டு முடியும் வரை அன்புமணி ராமதாஸின் கருத்து தான் தலைசிறந்த நகைச்சுவையாக இருக்கும்” என விமர்சித்திருக்கிறார்.
மேலும், “கோயம்பேடு பேருந்து நிலையம் 66 ஏக்கர் பரப்பளவு அல்ல; 37 ஏக்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்தி வந்தது, 6 ஏக்கர் நிலம் ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தி வந்தன. மொத்தமான 43 ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் எந்த பணியை மேற்கொள்ளலாம் என தனி குழு உருவாக்கி அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.அவர்களின் அறிக்கை இன்னும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு வழங்கப்படவில்லை. அந்த அறிக்கைக்கு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பின்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு உகந்த பயனுள்ள திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது!” என விளக்கமளித்திருக்கிறார்.
`கோயம்பேட்டில் லுலு மாலா? முற்றிலும் வதந்தி’ – மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு!
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான TN Fact Check வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி அளித்த விளக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும்!” என மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com