கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமாமிர்தம், முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகனான காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன், தன் தந்தை ராமாமிர்தம் சிலையை நிறுவி, திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளன. மோடி கட்டியிருப்பது 3,201 கோயில் என்பதைத் தவிர, இந்தியாவில் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அது ஏற்படுத்தாது.
ராமர் கோயிலுக்கு எதிராக யாரும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டியதை, பிரதமர் மோடி பதற்றத்துடன் கொண்டாட வேண்டிய காரணம் என்ன. பா.ஜ.க-தான் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதாககிச் சொன்னீர்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் அயோத்தியில் எங்கே வேண்டும் என்றாலும் ராமர் கோயில் கட்டலாம் எனச் சொன்னோம். ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி, இந்திய மக்களை திறமையாக நம்பவைத்துள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகத்தை அரசியலாக்குகிறார்கள்.
500 ஆண்டுக்கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள். இந்துகளுக்கு எப்பொழுது அவமானம் ஏற்பட்டுள்ளது. 300 ஆண்டுளாக முகலாயர்களும், ஐரோப்பியர்களும், அதற்கு முன்னதாக பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களும் இந்தியாவை ஆண்டார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்துக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க இல்லை. இந்துக்கள் தாங்களாவே வளர்ந்து கொண்டார்கள். ஆனால் இந்துக்கள்தான் தற்போது பெரும்பான்மையாக உள்ளனர். நாங்கள்தான் வளர்த்தோம் என கூறுவதற்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் யார்…
அயோத்தியில் கட்டுமானப் பணி முடிவதற்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மோடி எப்பொழுதும் அப்படித்தான் செய்வார். மோடிக்கு கோயில் திறப்பதில் தரம் இல்லை என சங்கராச்சாரியார் கூறியதால், தரையில் படுத்து அவரை மேம்படுத்திக்கொண்டார். இதனால் இந்து மதத்திற்கோ, ராமருக்கோ எந்த பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனைவியைக்கூட கவனிக்க முடியாத ஒருவர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறு எனக் கூறுகின்றனர்.
ராமர் கோயிலில் பட்டாபிஷேக சிலை இல்லை, ராமர் சீதையுடன் இருக்கும் சிலை இல்லை. ஒரு குழந்தையின் சிலையை வைத்துள்ளார்கள். மோடி ஜாதகம் பார்த்து செய்துள்ளார். இது அவருக்காக செய்து கொண்டதே தவிர, ராமருக்காகவும் மக்களுக்காகவும் செய்தது அல்ல. சாமியார் ஒருவர் பிரதமர் மோடி கடலில் குளித்தார் என்றார். யார்தான் கடலில் குளிக்கவில்லை. சாமியார்களில் மதுரை ஆதீனத்திற்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தி. அவர் எப்போதும் அப்படித்தான் பேசுவார். மதுரைக்கு ஆதீனமாக வருபவார்கள் எல்லாம், அப்படி பேசுவதை ஒரு பழக்கமாக வைத்துள்ளனர்.
ராகுல் காந்தி தாக்கப்பட்டது மிகப்பெரிய சமூக விரோத செயல். காங்கிரஸ் கட்சி கோயிலுக்கு செல்லாத கட்சி இல்லை. மகாத்மா காந்திதான் இந்தியாவில் ராமருக்கு புகழ் சேர்த்தவர். அந்த தேதியில் ராகுல் காந்தி கோயிலுக்கு சென்றார்.. மோடி தான் செல்ல வேண்டும் மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்று சொன்னால், அது தீண்டாமை. ராகுல் காந்தியை தடுத்தவர்கள் மீது தீண்டாமை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கு பா.ஜ.க.,வின் அரசு இருப்பதால் முடக்கி வைத்துள்ளனர்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com