சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் வாதாட அனுமதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், சச்சிதா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை, நீதிபதி ஆச்சர்யமாகப் பார்த்தார். அதில், செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னி, காணொலி மூலம் சைகை மொழியில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனை மொழிபெயர்ப்பாளர் சவுரவ் ராய் சவுத்ரி மொழிபெயர்த்துச் சொல்வார் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தனர். உடனே காணொலி மூலம் விசாரணைக்குத் தேவையான ஏற்பாடு செய்யும்படி நீதிபதி கோர்ட் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் அறை மிகவும் அமைதியாக இருந்தது. சாரா சைகை மூலம் வாதாடியதை சவுரப் ராய் நீதிபதி முன்பு மொழிபெயர்த்து சொன்னார். சைகை மூலம் நடைபெறும் விசாரணை மிகவும் தாமதம் ஆகும் என்று நீதிபதிகள் நினைத்தனர்.


ஆனால் எதிர்பார்த்ததைவிட விசாரணை மிகவும் வேகமாக நடந்தது. சைகை மொழியில் நடந்த விசாரணையை கோர்ட்டில் இருப்பவர்கள் எந்த வித சத்தமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். நீதிபதி தெரிவித்த தகவலை சவுரவ் சைகை மொழியில் சாராவிடம் எடுத்துக்கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு மீது ஆஜராகி சாரா வாதிட்டார். காணொலி மூலம் வாதாட கோர்ட் நிர்வாகம் மூலம் உதவியதாக வழக்கறிஞர் சச்சிதா தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா இது குறித்து கூறுகையில், ’சைகை மூலம் வாதாடியது மிகவும் அபாரமாக இருந்தது’ என்றார். இதனை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் உறுதிப்படுத்தினார்.
ஜாவேத் அபிதி ஃபவுண்டேசன் என்ற அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவிற்கு வழக்கறிஞர் சாரா ஆஜரானார். சுப்ரீம் கோர்ட் சைகை மொழியில் வாதிட அனுமதித்து இருப்பதால் இனி நாடு முழுவதும் உள்ள கோர்ட்களில் அது போன்று ஆஜராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com