தனக்குப் பிடித்தவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப், இந்தியாவிலும் தற்போது வெகுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இதைத் தனி மனித உரிமை கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறுபவர்கள், இதை `கலாசார சீர்கேடு’ என்று எதிர்த்துவருகின்றனர்.

அதுவும், ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் தன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அஃப்தாப் பூனாவாலா எனும் பார்ட்னரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம், கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு எதிரான பலரின் குரல்கள், அதிகமாக வெளிவர ஆரம்பித்தன. அதில் ஒரு குரலாகத்தான் பா.ஜ.க எம்.பி ஒருவர், இந்தியாவில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை ஒழிக்கச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்றும், காதல் திருமணங்கள்தான் அதிகப்படியான விவாகரத்துக்குக் காரணம் என்றும் நாடாளுமன்றத்தில் முழங்கியிருக்கிறார்.
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் விவகாரம் குறித்து இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (zero hour) எழுந்து பேசிய ஹரியானவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி தரம்பீர் சிங், “ஒரு தீவிரமான பிரச்னையை அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவின் கலாசாரமானது, அதன் `சகோதரத்துவம், உலகம் ஒரே குடும்பம்’ என்ற தத்துவங்களின் மூலம் அறியப்படுகிறது. நம் கலாசார அமைப்பு, உலகில் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. நம்முடைய `வேற்றுமையில் ஒற்றுமை கலாசாரம்’ உலகம் முழுவதாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

அதுபோல திருமணம் என்பது இங்கு ஏழு தலைமுறைகளாகத் தொடரும் புனித உறவாகக் கருதப்படுகிறது. திருமண விவாகரத்து விகிதத்தை அமெரிக்காவின் 40 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் 1.1 சதவிகிதம்தான். அதிலும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் விவாகரத்து விகிதம் இங்கு மிகவும் குறைவு. இருப்பினும், சமீபகாலமாக விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், காதல் திருமணங்கள்தான். எனவே, காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஏனெனில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் நடப்பதில்லை. அதோடு, காதல் திருமணங்களால் பல்வேறு கிராமங்களில் மோதல்கள் வெடிக்கின்றன. எனவே, காதல் திருமணத்தில் இரு குடும்பங்களின் சம்மதம் முக்கியமானது. மேலும், தற்போது `லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் சமூகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய புதிய நோய் உருவாகியிருக்கிறது. இதில், ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் இது போன்ற உறவுகள் மிகவும் பொதுவானவை. ஆனால், இந்தத் தீமை தற்போது நம் சமூகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது, அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானவை. சமீபத்தில் ஷ்ரத்தா வால்கர், அஃப்தாப் பூனாவாலா லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது நமது கலாசாரத்தை சீரழிப்பதுமல்லாமல், சமூகத்தில் வெறுப்பையும், தீமையையும் பரப்புகிறது. இது நீடித்தால் நமது கலாசாரம் அழிந்துவிடும். பின்னர், நமக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எனவே, இந்த ஆபத்தான நோயை சமூகத்திலிருந்து ஒழிக்க லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும், எப்படி திருமண உறவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்ட உரிமைகள் இருக்கிறதோ, அதுபோல லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பிலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்ட உரிமைகள் வகுக்கலாமே தவிர, அதை ஒழித்துக்கட்ட சட்ட வகுக்க வேண்டாம் எனவும் குரல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
நன்றி
Publisher: www.vikatan.com