மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக கேள்வி கேட்க தனியார் நிறுவன தொழிலதிபரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.க.எம்.பி.நிஷிகாந்த் துபே இந்த பிரச்னையை பெரிய அளவில் எழுப்பி மொய்த்ராவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளார். இப்பிரச்னை குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து வருகிறது.
மொய்த்ராவும் எந்த வித விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தன்மீதான குற்றச்சாட்டில் எந்த வித உண்மையும் இல்லை என்றும், தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும், துபேயின் குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் மொய்த்ரா இப்பிரச்னையில் சிக்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மொய்த்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க.எம்.பி.துபே, “சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவர் அனுப்பிய கடிதத்தில் ஹிராநந்தினி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் தர்ஷன் ஹிராநந்தினியிடம் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க பணம் வாங்கியதாக குறிப்பிட்டு இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துபே நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா எம்.பி. நாடாளுமன்றத்தில் சமீப காலம் வரை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினியின் தொழிலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, அதானி குழுமத்திற்கு எதிராக பணம் வாங்கிக்கொண்டு 60 கேள்விகள் வரை கேட்டுள்ளார். இது 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பணத்திற்கு கேள்வி கேட்கப்பட்டதை நினைவுபடுத்துவதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மொய்த்ரா, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலும் தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருப்பதாக கூறி பா.ஜ.க.எம்.பி.துபே, எம்.பி.க்கு கடிதம் அனுப்பியதாக கருதப்படும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். `தனக்கு கிடைத்த தகவல்களை உறுதி செய்யாமல் தன் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும், தன்னுடன் சமீப காலம் வரை நெருக்கமாக இருந்த ஜெய் ஆனந்த்துடான உறவு தனிப்பட்ட காரணங்களால் முறிந்து விட்டதாகவும், அதனால் தன் மீது வீண் பழியை சுமத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பத்திரிகையில் ஜெய் ஆனந்த் வெளியிட முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் பா.ஜ.க.எம்.பி.துபே மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை என் மீது தெரிவித்துள்ளார்’ என்கிறார்.

ஜெய் ஆனந்தும், மொய்த்ராவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஜெய் ஆனந்திற்கு எதிராக பல முறை மொய்த்ரா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, வீட்டிற்குள் புகுந்து எனது உடமைகளை திருடிச்சென்றது என்று பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தனது வீட்டில் இருந்த நாயைக்கூட திருடிச்சென்றுவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நாய் திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது.
மொய்த்ரா தனது நோட்டீஸில் தனது தனிப்பட்ட புகைப்படங்களை ஜெய் ஆனந்த் கசியவிட்டதாகவும், காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர் மற்றும் சிலர் அமர்ந்து விருந்து சாப்பிட்ட புகைப்படங்களை திருத்தம் செய்து பா.ஜ.க.எம்.பி.துபே சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் தொழிலதிபர் ஹிராநந்தினி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழுவில் கொடுத்துள்ள கடிதத்தில், மொய்த்ரா பாராளுமன்ற இணையத்தள ஐடி மற்றும் பாஸ்வேர்டு தனக்கு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், `மொய்த்ரா குறுகிய காலத்தில் தனது பெயர் தேசிய அளவில் பிரபலம் அடையவேண்டும் என்று விரும்பினார். பிரதமரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதன் மூலம் இது சாத்தியம் என்று அவரது நண்பர்கள் அவருக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள மொய்த்ரா, ”பிரதமர் அலுவலகம் ஹிராநந்தினி மற்றும் அவரது தந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அறிக்கையில் கையெழுத்து போடும்படியும், அப்படி போடாவிடில் ஹிராநந்தினியின் ஒட்டுமொத்த தொழிலையும் முடக்கிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். சி.பி.ஐ அல்லது பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு அழைத்தால் சென்று பதிலளிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. தொழிலதிபரிடம் மொய்த்ரா ரூ.2 கோடி வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com