மற்றொரு அமைச்சர் மஹ்சூம் மஜித், இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். மேலும், மற்றுமொரு அமைச்சர் மல்ஷா ஷரீப் என்பவரும் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தியர்கள் பலரும், X சமூக வலைதளப் பக்கத்தில் லட்சத்தீவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, மாலத்தீவை விட சிறந்த சுற்றுலாத் தளம் எனக் குறிப்பிட்டு, மாலத்தீவைப் புறக்கணிக்குமாறு #Boycott Maldives என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துவருகின்றனர். இது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னையாக வெடித்தது. நடிகர்கள் அக்ஷய் குமார், கங்கனா ரணாவத், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் போன்றோர் மாலத்தீவு அமைச்சர்களைக் கண்டித்து ட்வீட் செய்தனர்.
பின்னர் உடனடியாக மாலத்தீவின் முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத், “மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு கருவியாக இருக்கும் முக்கிய கூட்டாளியின் தலைவரை நோக்கி, மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா பயங்கரமான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். முகமது முய்ஸு (அதிபர்) அரசாங்கம் இந்தக் கருத்துகளிலிருந்து விலகி, அரசாங்கக் கொள்கையை இது பிரதிபலிக்கவில்லை என்று இந்தியாவுக்குத் தெளிவான உறுதிமொழியை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக மாலத்தீவு அரசு தெரிவித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com