இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.
தற்போது, அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், ஆண்ட கட்சியான சமாஜ்வாதி கட்சியும்தான் மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளில் முதன்மையான கட்சிகளாக விளங்குகின்றன. அதற்கு அடுத்தப்படியாக, இன்னொரு ஆண்ட கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது.
தலித் சமூகத்தினரின் ஆதரவுபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் அதன் தலைவர் மாயாவதி. தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறியிருக்கும் மாயாவதி, தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய சமூகங்களின் நலன்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘தேர்தல் முடிந்த பிறகு, கூட்டணி குறித்து எனது கட்சி யோசிக்கும். கூட்டணியால் தேர்தலில் எங்கள் கட்சி ஒருபோதும் பலனடைந்ததே இல்லை. மாறாக, கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தனித்துதான் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். வாய்ப்பு இருந்தால், தேர்தலுக்குப் பிறகு, தேர்தலுக்குப் பிறகு ஆதரவை அளிக்கும்.
கடந்த காலத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியோடும், சமாஜ்வாடி கட்சியோடும் கூட்டணி வைத்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட மாயாவதி, ‘அகிலேஷ் யாதவ் ஒரு பச்சோந்தியைப் போல நிறங்களை மாற்றினார்’ என்று விமர்சித்தார். கூட்டணிகள் எப்போதும் தனக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகவும், எனவே, தனித்துப்போட்டியிட முடிவுசெய்ததாகவும் அவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் கணிசமாக இருக்கும் ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகளும், நரேந்திர மோடி என்ற பிம்பமும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கும். முஸ்லிம் பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக பா.ஜ.க கூறிவருகிறது. இந்த நிலையில், முஸ்லிம் வாக்குகளையும் தலித் வாக்குகளையும் மாயாவதி கணிசமாகப் பிரிப்பார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 45 சதவிகிதம் ஓ.பி.சி வாக்குகளும், 20-21 சதவிகிதம் தலித் வாக்குகளும், 15-16 சதவிகிதம் முஸ்லிம் வாக்குகளும் இருக்கின்றன. இந்த சமூகங்களைச் சுற்றித்தான் மாயாவதியின் வாக்குகளும் இருக்கின்றன. இந்த நிலையில், தனித்துப் போட்டியிடுவது என்ற மாயாவதியின் முடிவால், எல்லா சமூகங்களின் வாக்குகளும் பிரியக்கூடிய நிலை ஏற்படும். இது, பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டுதான் ராமர் கோவில் திறப்பு விழாவை அவசர அவசரமாக பா.ஜ.க நடத்துகிறது என்பதை எல்லோரும் வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். இதனால், இந்துக்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு பெருவாரியாக விழும் என்பது பா.ஜ.க தலைவர்களின் எதிர்பார்ப்பு. அத்துடன், பிரதமர் மோடி அரசின் நலத்திட்டங்களும் பா.ஜ.க-வுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என்று பா.ஜ.க தலைவர்கள் நம்புகிறார்கள். கூடவே, தனித்துப் போட்டி என்கிற மாயாவதியின் முடிவும், பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு துணைபுரியும் என்று கணிக்கப்படுகிறது.!
கடந்த சில தேர்தல்களில் மாயாவதி தொடர் தோல்விகளைச் சந்தித்துவருவதால், அது அவரது அரசியல் வாழ்வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், அரசியலிலிருந்து மாயாவதி ஓய்வுபெறப்போவதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால், அரசியலிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் தனக்கு கிடையாது என்று அவர் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் வெற்றியைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தமது கட்சியினருக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில், 1990-களிலும், 2000-ளிலும் பிரதான அரசியல் கட்சியாக விளங்கிய பகுஜன் சமாஜ் கட்சி, கடந்த பத்தாண்டுகளில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
ஆட்சியதிகாரத்தில் இருந்த இந்தக் கட்சி, 2022 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதம் 12.8 மட்டுமே. இந்த வாக்கு சதவிகிதம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகரிக்குமா என்ற கேள்வியைக் காட்டிலும், இவரது கட்சி பிரிக்கப்போகும் வாக்குகளால் யாருக்கு லாபம் என்ற கேள்வியே முக்கியமானதாக இருக்கிறது. !
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com