சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளும், உங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்திருக்காது.

முக்கியமாக, உங்களுக்கு உணவு, மின்சாரம் உள்ளிட்ட சிக்கல்கள் இருந்திருக்காது என நம்புகிறேன். நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமக்களாக, ஒரு வாக்காளராகப் பார்த்தால், உங்களைப் போன்ற அதே நிலையில் நாங்கள் இல்லை. மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா… 2015-ம் ஆண்டில் வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம்.
ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதைவிட மோசமான நிலையைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. இந்த நேரத்தில் உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்வோம். இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் அரசியல்வாதிகளும் வெளியே வந்து, மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக உதவியைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
இதற்குப் பதிலளித்த சென்னை மாநகர மேயர் பிரியா தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com