கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்ததும், அதை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்ததும் பா.ஜ-வினரால் விமர்சிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ஆகியோர் எதிர்க்கட்சியினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இன்னொருபக்கம், ஜக்தீப் தன்கரின் ஜாட் (Jat) சமூகத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சிகள் தங்கள் சமூகத்தையே அவமதித்தாக போராட்டதிலும் ஈடுபட்டனர்.
இத்தகைய சூழலில், ராஜ்ய சபாவில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஜக்தீப் தன்கர், “ஜக்தீப் தன்கரை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) எவ்வளவு அவமானப்படுத்தினாலும் எனக்கு கவலையில்லை.
ஆனால், குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, என்னுடைய சமூகத்தை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னுடைய பதவியின் கண்ணியத்தைக் காக்க முடியவில்லை என்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என் கடமை” என்று கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். மிமிக்ரி விவகாரம் அவமரியாதைப் பற்றியதல்ல. இது அரசியலாக்கப்படுகிறது. ராகுல் காந்தி மட்டும் வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால், இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல்” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது. சபாநாயகர் ஜக்தீர் தன்கர் விவசாய சமூகத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேசியது தொடர்பாக எனக்கு சில கேள்விகள் இருக்கிறது…
1. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது தீவிரவாத, நக்சலைட், அராஜகவாதிகள் என பிரதமர் மோடி அரசு குறிப்பிட்டபோது, அது விவசாயிகளை அவமதிக்கவில்லையா?
2. விவசாயிகள் போராட்டத்தில் 700 விவசாயிகள் மரணமடைந்தனர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், ஒரு பா.ஜ.க, என்.டி.ஏ எம்.பி கூட எழுந்து நிற்கவில்லையே அது விவசாயிகளை இழிவுபடுத்தவில்லையா?
3. விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயிகள் நடந்துச் செல்லும் பாதையில் ஆணிப் பலகைகளை வைத்துக் காயப்படுத்தியதே பா.ஜ.க அரசு, அது விவசாயிகளை அவமதித்ததாக கருதப்படாதா? இதெல்லாம் உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா?
4. விவசாயிகளின் மகள்களான மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க எம்.பி-யால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் கண்ணீர் மல்க நீதிக் கேட்டு அழுதபோதும், பா.ஜ.க அரசின் காவல்துறை அவர்களை பூட்ஸ் காலால் மிதித்து நடுரோட்டில் இழுத்துச் சென்றபோதும் விவசாய சமூகம் அவமதிக்கப்படவில்லையா?
5. ராணுவத்தில் பணியாற்றும் விவசாயிகளின் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள், நாடாளுமன்றத்திற்கு வெளியே “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்” கோரி மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், அவமானப்படுத்தி, கைது செய்தபோதும் எங்கே சென்றீர்கள்?
எனவே, பதவியின் கண்ணியம் என்பது சாதியால் வாய்க்காது. அது கடமை உணர்வால் வந்தது. அரசே அரசமைப்புச் சட்டத்தைத் தாக்கும் போது, அதை எதிர்ப்பதே உண்மையான தேசப்பற்று. ஜெய் ஹிந்த்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com