வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து லஞ்சஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
பொன்முடி வழக்கின் பின்னணி
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராகவும், கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது.
லஞ்சஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களைத் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடியின் மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என வாதிட்டார்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த மேல்முறையீடு வழக்கில் தான் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை டிசம்பர் 21 காலை 10:30 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது,
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனாலே அவரது பதவி பறிபோகும் என்றும் 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்ற தகவல் வெளியானது.
இது குறித்து வழக்கறிஞர் ஜான் சத்யன், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எட்டாவது பிரிவின் படி 8(1) ஊழல் தடுப்புச் சட்டம், இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை உருவாக்குவது, லஞ்சம் வாங்குவது, பாலியல் வன்கொடுமை, பெண்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமையை பின்பற்றுவது, தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிப்பது, போதை பொருள் தடுப்பு சாட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் இத்தகைய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்பது நிரூபணமானாலே அவர் இயல்பாகவே தன் பதவியை இழக்கிறார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நடைமுறை தொடங்கும். இதன் பொருட்டு அந்த மக்கள் பிரதிநிதி ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில்போட்டியிட முடியாது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஒருவேளை சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படாமல், அபராதம் மட்டும் விதிக்கப்பட்டாலும் அந்த மக்கள் பிரதிநிதி தகுதி இழப்புக்கு உள்ளாவார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com