சந்திராயன் 3, லேண்டர் நேற்று முன்தினம் (23.08.2023) மாலை நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்தது. இதற்கு பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், சந்திராயன் 3-ன் திட்ட இயக்குநராக உள்ள வீர முத்துவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. இதை தொடர்ந்து, நேற்று மாலை பழனிவேலை அவரின் இல்லத்தில் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “ரயில்வே தொழிலாளராக இருந்து, ரயில்வே தொழிலாளர்களுக்கு தன்னுடைய குரலை கொடுத்திருக்கின்ற பழனிவேலின் மகன், இன்று சந்திராயன் 3-ஐ நிலவிலே இறக்கியதன் மூலமாக மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இது அவருக்கு கிடைத்திருக்கின்ற பெயர் மட்டுமல்ல… விழுப்புரம் நகரத்திற்கு, தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற பெருமை.
நன்றி
Publisher: www.vikatan.com